India

தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்ததால் சொந்த மகளையே எரித்துக் கொன்ற பெற்றோர்- ஆணவப் படுகொலை அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் ரெட்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், தலித் சமூகத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞரும் ஓர் ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இது இருவீட்டாருக்கும் தெரியவந்துள்ளது.

பெண்ணின் குடும்பத்தினர், சாதியைக் காரணம் காட்டி காதலுக்கு தெரிப்பு தெரிவித்துள்ளனர். நந்தகுமாரின் பெற்றோரும் இருவரும் இனி காதலிக்கக் கூடாது என கண்டித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பெண்ணின் பெற்றோர் கல்லூரிக்கு அனுப்பாமல் அந்தப் பெண்ணை வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர்.

அதேவேளையில் வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதலர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு, சித்தூரில் உள்ள கோயில் ஒன்றில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் தகவலறிந்து வந்த இருவீட்டாரும் சண்டையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊர் தலைவர்கள் இரு வீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்துவைத்தனர்.

மேலும், பெண்ணுக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால் சட்டப்படி இந்த திருமணம் செல்லாது. எனவே இருவரும் தனிதனியே பிரிந்து பெற்றோர்களுடன் செல்லுமாறும், பெண்ணிற்கு திருமண வயது வந்தபிறகு பேசிக்கொள்ளலாம் எனவும் கூறி அனுப்பிவைத்துள்ளனர்.

இதனிடையே நேற்றையதினம் பெண் வீட்டில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறி பெற்றோர், அவசர அசரமாக வீட்டின் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் சடங்குகளைச் செய்து அவரது உடலை எரித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைத்த அக்கம்பக்கத்தினர் குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடல் எரிக்கப்பட்ட இடத்தை சோதனை செய்தனர்.

மேலும் விசாரனைக்காக பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலரை கைது செய்துள்ளனர். விசாரணையில் நந்தகுமார் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது சொந்த மகளையே அவர்களது பெற்றோர் எரித்துக் கொன்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், முழுமையான விசாரணைக்குப் பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருப்பதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. சித்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது சாதி ஆணவப்படுகொலை இது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.