India

சீன அதிபர் மற்றும் மோடியுடன் இருக்கும் இன்னொருவர் யார்? - தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மது சுதன்!

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு மகாபலிபுரத்தில் நடைபெற்றறது. மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் சிற்பம், சுற்றுலா மையங்களைப் பார்வையிட்டபடி, இருவரும் பேசினர். பின்னர், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டிய நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

மோடி - ஜின்பிங் சந்திப்பு முறைசாரா சந்திப்பாக அமைந்துள்ளதால், இருநாட்டுத் தலைவர்களும் எந்தக் குறிப்புகளும் வைத்துக்கொள்ளாமலேயே உரையாடினர். இந்தச் சந்திப்பின்போது மோடி மற்றும் சீன அதிபருடன் மேலும் இரண்டு பேர் உடனிருந்தனர். அதில் ஒருவர் சீனர். இன்னொருவர் இந்தியர்.

மது சுதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி, இரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார். மது சுதனின் தந்தை ரவீந்திரன் கோவையைச் சேர்ந்தவர்; தாய் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்.

மது சுதன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் (அரசியல்) ஆவார். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி - ஜின்பிங் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அங்கும் உடனிருந்தார் மது சுதன்.

தற்போதும், அவரே மோடி - ஜின்பிங் சந்திப்பின்போது மொழிபெயர்ப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். உயரிய பதவி வகித்து இருநாட்டுத் தலைவர்களுடனிருந்த மது சுதன் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

நாட்டுத் தலைவர்களின் மொழிபெயர்ப்பாளராகச் செயல்படுவது சாதாரண காரியமல்ல. மொழி பற்றி கூர்மையாக அறிந்திருப்பதோடு, அவர்கள் பேச வாய்ப்புள்ள துறைகள் பற்றியும் தெரிந்திருக்கவேண்டியது அவசியம். அதன் அடிப்படையிலேயே மிக கவனமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். அப்படித்தான் மது சுதனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த மது சுதன் இந்திய வெளியுறவுப் பணியில் (IFS) 2007ம் ஆண்டு பேட்ச் அதிகாரி. பணியில் பெரும்பாலான நாட்களை சீனாவில் கழித்த மது சுதனுக்கு, முதல் பணியே சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலராகத்தான் வழங்கப்பட்டது.

Madhu Sudan IFS

பின்னர், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு மீண்டும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டு 2013ல் சீனாவுக்கு அனுப்பப்பட்டார்.

தற்போது, சீனாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலராக இருக்கும் மது சுதனுக்கு, சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் உள்பட பல மொழிகள் நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.