India

விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை நாசாவின் ஆர்பிட்டரால் ஏன் படம் எடுக்க முடியவில்லை - காரணம் இதுதான்!

நிலவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது. பல்வேறு வட்டப்பாதை நிலைகள் மாற்றப்பட்டு, ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றபோது, விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவுக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர், ஆர்பிட்டர் மூலமாக லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது. இருப்பினும் லேண்டருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இருப்பினும், விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பைப் பெறும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு, பகல் பாராமல் இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். லேண்டருடன் இணைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவுக்குத் துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இறங்கியது.

இதன் ஒரு பகுதியாக, ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சியில் நாசா ஈடுபட்டது. நாசா கடந்த 2009ம் ஆண்டு அனுப்பிய ஆர்பிட்டர் நாளை விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை கடக்க உள்ளதாகவும், அப்போது அதை புகைப்படம் எடுக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

“இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தளத்தை சுற்றியுள்ள பகுதிகளை நாசா பகிர்ந்து கொள்ளும்” என்று LRO திட்ட விஞ்ஞானி நோவா பெட்ரோ கூறியிருந்தார். இந்நிலையில், விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும், ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் நாசா கூறியுள்ளது.

LRO Orbiter

இதுகுறித்து நாசா அனுப்பிய மின்னஞ்சலில், செப்டம்பர் 17ம் தேதி விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தின் மீது எல்.ஆர்.ஓ ஆர்பிட்டர் சுற்றி படங்களை எடுத்தது, இருப்பினும் லேண்டரின் இடம் சரியாக தெரியவில்லை. ஆர்பிட்டர் அப்பகுதியை கடந்த போது அப்பகுதியில் பெருமளவில் இருள் சூழ்ந்திருந்ததே இதற்கு காரணம் என்கிறது நாசா. அக்டோபர் 14ம் தேதி எல்.ஆர்.ஓ அப்பகுதியின் மீது மீண்டும் பறக்கும், அப்போது வெளிச்சம் மிகவும் சாதகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.