India

புதிய அபராத முறையை வாபஸ் பெறாவிடில் போராட்டம் வெடிக்கும்: சரக்கு லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை!

மத்திய பாஜக அரசு மேற்கொண்ட புதிய மோட்டார் வாகனச் சட்டத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதால், சரக்கு லாரி உரிமையாளர்கள் பெரும் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், 41 போக்குவரத்து அமைப்புகளை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி போக்குவரத்து அமைப்பின் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்க போக்குவரத்துத் துறை அமைச்சக அலுவலகத்துக்கு சென்றனர்.

ஆனால், அமைச்சர் நிதின் கட்கரி அங்கு இல்லாததால் மோட்டார் வாகன சட்டத் திருத்ததை திரும்ப பெறவேண்டும் என்ற தங்களின் கோரிக்கைக்கான மனுவை அதிகாரிகளிடம் அளித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

அந்த மனுவில், எதிர்வரும் 16ம் தேதி மோட்டார் வாகன சட்டத் திருத்தம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசவிருப்பதாகவும், பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் செப்.,19 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்ததகாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மோட்டார் வாகனச் சட்டத்தின் படி வசூலிக்கும் அபராதத்தால் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

மோடி அரசு மேற்கொண்ட இந்த புதிய அபராத விதிக்கும் முறையால் நாடெங்கும் உள்ள வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். போலிஸார் விதிக்கும் அபராதத் தொகை தங்களது மாதச் சம்பளத்தை விடவே மிக அதிகம் என்றும் புலம்பித் தீர்க்கின்றனர்.