India

“இனியும் சிவில் சர்வீஸ் அதிகாரியாக இருப்பது நியாயமற்றது” : கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா!

2009ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இவர் தற்போது கர்நாடகா மாநிலத்தின் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் துணை ஆணையராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், சசிகாந்த் திடீரென தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த ராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “பன்முகத் தனமைக்கொண்ட ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு முறையில்லாமல் சமரசத்திற்கு பலியாகும்போது, அதில் சிவில் சேவை செய்யும் ஊழியராக இருப்பது நியாயமற்றது.

மேலும் வரும் நாட்களில் இந்திய நாட்டின் அடிப்படைத் தன்மைகள் சிதைந்து போகும் அளவிற்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

அதனால் சிவில் சர்வீஸ் பணியை தொடராமல், வெளியில் இருந்துகொண்டு எனது பணியை எல்லோருக்குமானதாகச் செய்ய முடிவெடுத்துள்ளேன். இந்த ராஜினாமா நடவடிக்கை எனது தனிப்பட்ட முடிவு” என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் கடிதம் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் நாட்டில் சுதந்திரமாக தனது கருத்தைக் கூட தெரிவிக்க முடியவில்லை எனக்கூறி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.