India

“ப.சிதம்பரம் கைது - திட்டமிடப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை” : காங்கிரஸ் கண்டனம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பா.ஜ.க அரசு திட்டமிட்ட பழிவாங்கும் நோக்கோடு இந்தக் கைதை அரங்கேற்றி வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் ப.சிதம்பரம் சிபிஐ-யால் நெருக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ப.சிதம்பரத்தின் கைது மத்திய பா.ஜ.க அரசின் ஜனநாயகப் படுகொலை. தேர்ந்தெடுக்கப்பட்ட - திட்டமிடப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்காக சிபிஐ-யை பயன்படுத்தி வருகிறது பா.ஜ.க அரசு.

ப.சிதம்பரத்தின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. அவருக்கு எதிராக எந்த குற்றமும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை. அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே ஒரு குற்றவாளியைப் போல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க ஆட்சியில் நிலவும் பொருளாதார வீழ்ச்சி, அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்னைகளை திசைதிருப்பவே ப.சிதம்பரம் மீதான கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப் படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையும் விசாரணையை துவக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று பிற்பகலில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.