India

இனி குழந்தைகளுக்கும் தலைக்கவசம் கட்டாயம் : சட்டத்திருத்தத்தின்படி அறிவிப்பு!

மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதில், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.100 விதிக்கப்பட்ட அபராதம் 1,000 ரூபாயாகவும், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.100க்கு பதில் ரூ.1,000 வசூலிக்கப்படும். ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதையும் மீறி வாகனம் ஓட்டினால் ரூ.5,00 க்கு பதில் ரூ.10,000 வசூலிக்கப்படும். போதையில் வாகனம் ஓட்டினால், ரூ.10 ஆயிரம், வேகமாக வாகனம் ஓட்டினாலோ, ரேசிங் போன்ற பந்தயத்தில் ஈடுபட்டாலோ ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு பட்டியல் நீள்கிறது.

இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில், பைக்கில் செல்லும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சைக்கிளில் செல்வதற்காக ஏற்கெனவே குழந்தைகளுக்கென ஹெல்மெட்கள் இருக்கும் நிலையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றத்தால் பைக்கில் செல்வதற்கென குழந்தைகளுக்கான ஹெல்மெட்கள் இனி சந்தைகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒருபுறம் பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டாலும், மறுபுறம் பெரும் வணிக நோக்கத்தோடு இதுபோன்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.