India

வீட்டில் இருந்தபடியே FDFS, 1000 GB டேட்டா என ஜியோ ஃபைபரில் அதிரடி காட்டும் அம்பானி : பதட்டத்தில் ஏர்டெல்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது ஆண்டு பொதுக்கூட்டத்தில், ஜியோ ஜிகா ஃபைபர் சேவை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதன் தலைவர் முகேஷ் அம்பானி. அதனை டெக் உலகம் உற்று நோக்கத் தொடங்கி உள்ளது.

2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் வெறும் மூன்றே ஆண்டுகளில் மக்கள் மத்தியில் அதிரடி சலுகைகள் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தகட்டமாக ப்ராட்பேண்ட் துறையிலும் கால்பதிக்க முடிவெடுத்த முகேஷ் அம்பானி, ஜியோ ஜிகா ஃபைபர் குறித்து கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது, ஜியோ ஜிகா ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை வருகிற செப்டம்பர் 5ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.

அறிமுகச் சலுகையாக ஆயுள் சந்தா செலுத்துவோருக்கு ஜியோ 4K HD டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்த அவர், ஜியோ ஃபைபர் இண்டர்னெட், வாய்ஸ் கால், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது என தெரிவித்தார்.

ஜியோ ஃபைபர் சேவை ப்ராபேண்ட், லேண்ட்லைன், டிவி ஆகியவற்றை ஒன்றாக இணைக்கவுள்ளது. பைபர் சேவையை பெற ரூ.700 முதல் ரூ.10,000 வரை சந்தா விலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஃபைபரின் வேகம் 100 MBPSல் இருந்து 1GBPS வரை இருக்கும்.

சர்வதேச வாய்ஸ் கால்ஸ்களுக்கு தற்போதைய சந்தை விலையில் 1/10 மடங்கு மட்டுமே ஜியோவில் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், அமெரிக்கா, கனடா அழைப்புகளுக்கு ரூ.500 கொண்ட சந்தாவையும் அறிமுகப்படுத்தியுள்ளார் முகேஷ் அம்பானி.

இதுமட்டுமல்லாமல், புதிதாக வெளியாக திரைப்படங்களை ஜியோ FDFS என்பதின் மூலம் விலைகொடுத்து அதே நாளில், வீட்டில் இருந்தே பார்க்கும் வசதி 2020ல் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் இதன் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் குறிப்பிடவில்லை.

மோடி அரசின் ஆதரவோடு டெலிகாம் சந்தையில் கோலோச்ச துவங்கி இருக்கும் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால், ஏர்டெல் உள்ளிட்ட இந்திய சந்தையில் இருக்கும் பிற டெலிகாம் நிறுவனங்கள் பெரும் பதட்டத்தில் உள்ளன. இதனால், எதிர் வரும் காலங்களில் டெலிகாம் நிறுவனங்கள் பெரும் விலைகுறைப்பு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.