India
காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க புதிய நடைமுறை... ராகுல் அறிவுறுத்தலின்படி புதிய ‘பிளான்’!
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக புதிய உத்தியைப் பின்பற்றவேண்டும் என ராகுல் காந்தி இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியை சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார் ராகுல்.
ராகுல் காந்தி ராஜினாமா செய்து பல வாரங்களாகியும் காங்கிரஸ் கட்சியில் புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்படாதது தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தலைவர் பொறுப்புக்கு ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்கள் பெயர்கள் அடிபட்டன.
பிரியங்கா காந்தியைத் தலைவராக நியமிக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்ட பல காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஆனால் தலைவர் பொறுப்பு தனக்கு வேண்டாம் என பிரியங்கா மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்தச் சூழலில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. புதிய தலைவர் தேர்வில் புதிய நடைமுறையைப் பின்பற்ற ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் கூடித் தலைவரை தேர்வு செய்யாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மற்ற அமைப்புகளின் நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியதும் 5 குழுவாகப் பிரிந்து தனித்தனியாக விவாதிக்கின்றனர். பின்னர் அந்தந்தப் பகுதி சார்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்களுடன் விவாதிக்கவுள்ளனர். பின்னர் னைவரும் ஒன்றாகக் கூடி பரிந்துரைப் பட்டியலைத் தயாரிக்க இருக்கின்றனர்.
அந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு காரியக் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசித்து தலைவரை தேர்வு செய்வார்கள். பல்வேறு கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தப் புதிய நடைமுறையால் அடுத்த தலைவர் தேர்வு இன்னும் சில நாட்கள் தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!