India

ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க, நேர்மையான பணியாளர்களை பழிவாங்கும் மோடி அரசு!

ரயில்வே பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பெயர்ப் பட்டியலை தயாரிக்க உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான கடிதம், நேற்று முன்தினம் ரயில்வே உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், 13 லட்சமாக உள்ள ரயில்வே பணியாளர்களின் எண்ணிக்கையை 10 லட்சமாகக் குறைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்திருப்பதாகவும், அடுத்த மார்ச் மாதத்தில் இருந்து 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 9ம் தேதிக்குள் 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் குறித்த பட்டியலை ரயில்வே மண்டல உயர் அதிகாரிகளுக்கு அனுப்பவேண்டும் என ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பணி செய்யும் தொழிலாளர்களின் பணித்திறன் தொடர்பான அறிக்கையை தயார் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. போதிய திறன் இல்லாத மற்றும் ஊழல் புரியும் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கும் நோக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ரயில்வே அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே யூனியன் அமைப்பான டி.ஆர்.இ.யு துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில், . “ரயில்வே துறையில் 30 ஆண்டுகளுகள் பணிமுடித்த அல்லது 55 வயது நிறைவு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு பணித்தகுதி ஆய்வு செய்து கட்டாய ஓய்வு வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இது முற்றிலும் அராஜக செயல்.

அதுமட்டுமின்றி ஊழியர்கள் வேலைத்திறன் பற்றி அறிக்கை அளிக்கும்படி உத்தரவும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கும் உயரதிகாரிகளின் செயல்களுக்கு துணைபோகாத நேர்மையான பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் பழி வாங்கப்படுவார்கள். எனவே, இந்த உத்தரவை ரயில்வே கைவிட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்.ஆர்.எம்.யு யூனியன் சார்பில் ஒருவர் கூறுகையில், “பா.ஜ.க அரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதனால் தான் தற்போது பணியாளர்களை நீக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. தனியாரிடம் ஒப்படைத்தால் அரசு ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும்; அதனால் அரசுக்கு நெருக்கடி உருவாகும். அதனை சமாளிக்கவே, முன்கூட்டியே இந்த முயற்சியை மோடி அரசு மேற்கொள்வதாகத் தொன்றுகிறது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொழிலாளர்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்”. என அவர் தெரிவித்துள்ளார்.