India

முதல்வரின் மனைவியிடமே கைவரிசை - வங்கி அதிகாரி எனப் பேசி ரூ.23 லட்சத்தை சுருட்டிய சைபர் மோசடி!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். முதல்வரின் மனைவி பிரனீத் கவுர், பாட்டியாலா தகுதி எம்.பி. ஆவார். இவர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் தங்கியிருந்தார்.

அப்போது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை வங்கி மேலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பிரனீத்தின் சம்பளத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்த, சில தகவல்கள் வேண்டும் என்று எம்.பி பிரனீத்திடம் கேட்டுள்ளார். புது எம்.பியான பிரனீத், இது மத்திய அரசின் அலுவல் நடைமுறை என நம்பி அனைத்து தகவல்களையும் அளித்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு அதிர வைக்கும் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 23 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. அப்போது தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார் கவுர். உடனடியாக இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

பிரனீத் கவுர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறை, அவருக்கு அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து ஏமாற்றிய நபர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருக்கிறார் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து ஜார்கண்ட் சென்ற பஞ்சாப் காவல்துறை மோசடியில் ஈடுபட்ட நபரைக் கைது செய்தனர்.