India

இன்னும் 4 மாதங்களில் டெல்லியில் அனைவருக்கும் இலவச wifi : கெஜ்ரிவால் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

2015ம் ஆண்டு டெல்லிக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பரப்புரையின் போது டெல்லி மக்களுக்கு இலவச வைஃபை(wi-fi) வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் கெஜ்ரிவால்.

இதனையடுத்து பெரும்பான்மை தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்வரி மாதத்தோடு கெஜ்ரிவாலின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக டெல்லிக்கு இலவச வைஃபை இன்னும் 3 முதல் 4 மாதங்களுக்குள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்லி முழுவதும் முதல் கட்டமாக 11 ஆயிரம் பகுதிகளில் அமைக்கப்படவுள்ள வைஃபை வசதியால் தலா 15 GB இண்டர்நெட் வசதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பணிபுரியும் பெண்களுக்காக இலவச மெட்ரோ சேவை வழங்கப்படும் என்றும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவச வைஃபை வழங்கப்படும் என்றும் அண்மையில் கெஜ்ரிவால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.