India

குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை விற்று சம்பாதிக்கும் பா.ஜ.க: நாடாளுமன்றத்தில் பெருமையாகச் சொன்ன அமைச்சர்

நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் வாகனங்களின் அனைத்து தகவலும் தனியார் கம்பெனியிடம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

உங்கள் வாகனப் பதிவு எண், எஞ்சின் எண், வாகனத்தின் மாடல், வாகனத்தின் நிறம், டீலரின் பெயர், வாகனத்தின் திறன், காப்பீட்டு நிறுவனத்தின் பெயர், காப்பீட்டின் காலாவதி நாள், செலுத்தப்பட்ட வரியின் காலாவதி நாள் என நீங்கள் மறந்த தகவலை கூட உங்களிடம் பணம் பறிக்க நினைக்கும் தனியார் முதலாளிகளுக்கு தெரியும்.

இந்த தகவலை வைத்துக்கொண்டு தான் உங்கள் போனிற்கு விளம்பரங்கள் வருகின்றது. இதை தனியார் நிறுவனங்கள் திருடவில்லை, அவர்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க அரசு தூக்கி கொடுத்துள்ளது.

நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தின் போது, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்கும், பொருளாதார ஆய்வறிக்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, பட்ஜெட்டில் குளறுபடிகள் உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

எம்.பி. ஹூசைன் தல்வாய்

இந்நிலையில், பொருளாதார அறிக்கையில், தனி நபர் தகவல்களைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுவது எவ்வாறு என அறிக்கையில் ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ஹூசைன் தல்வாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது அவர்,“வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமத் தகவல்களை மொத்தமாக மத்திய அரசு விற்பனை செய்ய முயல்கிறதா? அவ்வாறு விற்றால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது?”என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, “ மத்திய அரசு ஏற்கெனவே வாகனப் பதிவு விவரங்களையும், ஓட்டுநர் உரிம விவரங்களையும் விற்பனை செய்து வருவாய் ஈட்டியிருப்பதாகவும், இந்த தகவலைப்பயன்படுத்தி 87 தனியார் நிறுவனங்களுக்கும், 32 அரசு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று நிதின் கட்காரி ஒப்புக் கொண்டுள்ளார்.

நிதின் கட்காரி

மேலும், “மத்திய அரசின் பதிவேட்டில் சுமார் 25 கோடி வாகனப் பதிவுகளும், 15 கோடி ஓட்டுநர் உரிமப் பதிவுகளும் இருக்கின்றன. 2019-20ம் நிதியாண்டில் இத்தகவல்களை பெற விரும்பும் நிறுவனங்கள் ரூ. 3 கோடி செலுத்தி, தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றும் தனியாருக்கு பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ன் படி, தனியுரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும் என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க சொந்த நாட்டு மக்களின் வாகனப் பதிவு எண், எஞ்சின் இயந்திரத்தின் எண், காப்பீட்டு நிறுவனத்தின் பெயர், காப்பீட்டின் காலாவதி நாள், செலுத்தப்பட்ட வரியின் காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்களை விற்பனை செய்துள்ளதாக அன்மையில் தகவல் வெளிவந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பாடுத்தியுள்ளது.