India

தேள் கொட்டி 10 வயது சிறுவன் பலி : பள்ளியை சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்தியதால் விபரீதம்!

உத்தர பிரதேசத்தின் ஜான்சி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள், கடந்த புதன்கிழமை அன்று மாணவர்களிடம் பள்ளியை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 4ம் வகுப்பு படிக்கும் மாணவன் கொட்டி வைக்கப்பட்ட மரத்தின் இலைகளை அப்புறப்படுத்த முயன்றுள்ளான். அப்போது அதில் இருந்த தேள் ஒன்று மாணவனை கொட்டியது. இதனால் அவன் அலறியதை அடுத்து அருகில் இருந்த மாணவன் தகவலை ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளான். கொட்டியது தேள் என்பது தெரியதால் குளவி கொட்டிவிட்டது எனத் தவறாகத் தெரிவித்துள்ளான்.

அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள் மாணவன் வலியால் துடித்ததை அடுத்து அருகில் உள்ள மூலிகை மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மூலிகை மருத்துவம் பலனளிக்காததால், அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று உயிரிழந்தான்.

சிறுவன் உயிரிழந்ததற்கு தலைமை ஆசிரியரே காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டிய நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியரை மாவட்ட கல்வித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.