India

பட்ஜெட்டில் 'Disinvestment' என்ற வார்த்தையை கவனித்தீர்களா? அதன் சூழ்ச்சி என்ன தெரியுமா?

மோடி அரசு இரண்டாவது முறை பதவியேற்ற பின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையின் போது அரசு பொது நிறுவனங்கள் பற்றிய அறிவிப்பில் 'DisInvestment' என்ற வார்த்தையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்தினார். அதற்கான பொருளை தெரிந்து கொண்டால் மத்திய அரசு செய்ய காத்திருக்கும் சதிச் செயல் புரியும்.

'DisInvestment' என்பதற்கு முதலீட்டை திரும்பி பெறுதல் என்பது பொருள். இன்றைய பட்ஜெட்டில் ஏர் இந்தியா உள்ளிட்ட கடனில் தத்தளிக்கும் பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை திருமபப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.

அதாவது, பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்று அதன் மூலம் நிதி திரட்டப்படும். அதுவே முதலீட்டை திரும்பப் பெறுதல் எனப்படுகிறது.

சரி அந்த நிதி, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் தானே? என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், அந்த நிதி பெரும்பாலும் ’தேசிய முதலீட்டு நிதியத்தில்’ கொண்டு சேர்க்கப்படும். தேசிய முதலீட்டு நிதியத்தில் இருக்கும் நிதி அரசின் மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

குறிப்பாக தனியார் நிறுவனங்களின் போட்டி அதிகமாக இருக்கும் துறையில் உள்ள, அரசு நிறுவனங்களில் தான் இந்த, 'DisInvestment' நடைபெறுகிறது. அரசின் இன்றைய அறிவிப்புக்கு பின்னும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் தத்தளிக்கும் சில பொதுத் துறை நிறுவனங்களின் பங்கை விற்கும் திட்டம் இருக்கிறது.

அதில் ஒரு நிறுவனம் தான் பி.எஸ்.என்.எல். கிட்டத்தட்ட 1,50,000 உழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத அளவுக்கு திணறுகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம். இன்று வரை 4ஜி அலைக்கற்றை பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ஒதுக்கப்படவில்லை. வங்கிகள் மூலம் கடன் பெறவும் முட்டுக் கட்டை போடுகிறது மத்திய அரசு. காரணம் ஜியோ என்ற கார்ப்பரேட் நிறுவனம்.

இலவசங்களை வாரி இறைத்து, தொலை தொடர்பு துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜியோ நிறுவனம், கிட்டத்தட்ட 1,25,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றுள்ளது.

”டேட்டா தான் உலகின் அடுத்த எண்ணெய்” என்று ஜியோ நிறுவனத்தின் துவக்க விழாவில் முகேஷ் அம்பானி தெரிவித்தார். அந்த டேட்டாவை தான் இலவசமாக கொடுத்து, இந்திய தொலை தொடர்பு சந்தையை கைப்பற்றியிருக்கிறது ஜியோ. டிராய் விதிமுறைகள் படி 3 மாதங்களுக்கு மேல் இலவச சேவையை எந்த நிறுவனமும் வழங்கக் கூடாது. ஆனால் ஜியோ கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேல் இலவச சேவை வழங்கியது. மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜியோவால் ஏர்டெல், வோடாஃபோன், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு பெருத்த சேதாரம்.

ஜியோ என்ற ஒற்றை நிறுவனத்திற்கு அரசு பரிந்துபோவதன் மற்றொரு நோக்கம் பி.எஸ்.என்.எல்-ஐ பலி கொடுப்பது. இன்று அறிவித்துள்ள 'Disinvestment' இலக்கில், பி.எஸ்.என்.எல் நிறுவனமும் பலி கடாவாக்கப்பட இருக்கிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்க வேண்டும் என ஊழியர்கள், எதிர்க்கட்சிகள் என அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், நிதியமைச்சர் தனது உரையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல், “ பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு திரும்பப் பெறப்படும்” என சாதுர்யமாக பேசினார்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்தால், அந்த பங்குகளை ஜியோ நிறுவனமே வாங்கும் என்றும் தகவல்கள் வருகின்றன.

அப்படி பங்குகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பிறகு, அந்த அரசு நிறுவனம் என்ன ஆகும் என்பதற்கு வி.எஸ்.என்.எல் (VSNL) ஒரு உதாரணம்.

1999 -2000 ஆண்டு காலகட்டத்தில், 1,478 கோடி ரூபாய் என்ற பெரும் வருவாயை ஈட்டி சிறப்பாக செயல்பட்டு வந்தது வி.எஸ்.என்.எல். ஆனால், தனி ஒரு பொதுத் துறை நிறுவனமாக வி.எஸ்.என்.எல் சந்தையை ஆக்கிரமித்துள்ளதாக கருதப்பட்டது. எனவே சந்தையில் போட்டியை உருவாக்க 25% பங்குகளை டாடா நிறுவனத்திடம் விற்றது மத்திய அரசு. இதனால் அரசுக்கு 3,689 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. ஆனால் அடுத்த ஓராண்டில் வி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வருவாய் பெரும் அளவில் சரிந்தது. விளைவு இப்போது வி.எஸ்.என்.எல் என்ற நிறுவனம் டாடா கம்யூனிகேஷன்ஸ் என்ற தனியார் நிறுவனமாக மாறியுள்ளது.

பி.எஸ்.என்.எல் விஷயத்திலும் இது தான் நடக்க இருக்கிறது. ஒருவேளை ஜியோ நிறுவனமே பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால், அடுத்த சில ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல் என்ற நிறுவனமே இல்லாத நிலை உருவாகும். தனி ஒரு நிறுவனமாக ஜியோ இந்திய தொலை தொடர்பு சந்தைய ஆளும். இப்போது கொடுக்கும் இலவசங்களுக்கு எல்லாம், சேர்த்து வைத்து அப்போது வசூலிக்கும்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அழிக்க மத்திய அரசு இன்னும் என்னவெல்லாம் செய்கிறது என்பதை பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத் தலைவர் கூறுவதை பின் வரும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.