India

காஷ்மீரில் தேர்தல் நடத்த முடியாதவர்கள் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதா?: டி.கே.எஸ்.இளங்கோவன்

“காஷ்மீர் மக்கள் தங்களுக்கான அரசைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை ஏன் பறிக்கிறீர்கள்?” என மாநிலங்களவையில் டி.கே.எஸ். இளங்கோவன் எம். பி., கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியதாவது :

“கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கும் இந்தக் கூட்டத் தொடருக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த அரசு பத்து அவசரச் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இது அவர்களுக்கு நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் இப்படிச் செய்திருப்பது நாடாளுமன்ற நடவடிக்கைக்குப் புறம்பாக தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு இந்த அரசு இதைச் செய்துள்ளது என்பதை குற்றச் சாட்டாக வைக்கிறேன்.

இந்த பத்து அவசரச் சட்டங்களும் அவசர முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. மிகச் சாதாரணமான சட்டத்திருத்தங்கள். காஷ்மீர் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் இந்த அரசு நாடாளுமன்றத்தை மதிக்காமல் அவசரச் சட்டம் கொண்டுவந்த முறையை நான் எதிர்க்கிறேன். எழுபது ஆண்டு கால இந்திய அரசியல் வரலாற்றில் இரண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு இடைப்பட்ட காலத்தில் இதுபோல பத்து அவசரச் சட்டங்களை எந்த அரசும் வெளியிட்டது கிடையாது. முதல் முறையாக இந்த அரசு இதைச் செய்திருப்பது, தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக அவசரச் சட்டம் என்ற இந்த முறையைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன்தான் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

நாடுமுழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியமே இல்லை என்று இந்த அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதனால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலச் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதை ஆறுமாதம் தள்ளிவைக்கும் தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலோடு இணைத்து ஜம்மு-காஷ்மீர் என்ற ஒரே ஒரு மாநிலத் தேர்தலைக் கூட இந்த அரசால் நடத்த முடியவில்லை. இது ஒரு இந்தியா, ஒரு தேர்தல் என்ற அவர்களது முழக்கத்துக்கு அவர்களாலேயே செயல்வடிவம் கொடுக்க முடியவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

காஷ்மீரில் எந்தக் குழப்பமும் இல்லை. மேலும் அரசு இயந்திரம் இயங்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லித்தான் காஷ்மீர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது என்பதும் அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற சில்லரைக் காரணத்துக்காக ஒரு மாநில அரசைக் கலைக்கும் பரிந்துரையை காஷ்மீர் மாநில ஆளுநர் செய்தார். ஒரு ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும்? சட்டமன்றக் கட்சித் தலைவர்களை நேரில் அழைத்து யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை உறுதி செய்து ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும், ஆனால் காஷ்மீர் ஆளுநரோ இயந்திரப் பழுதால் பெரும்பான்மையினரின் கோரிக்கை அடங்கிய கடிதம் தனக்குக் கிடைக்கவில்லை என்று கூறி சட்டமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரை செய்தார். ஆனாலும் ஆறுமாத காலத்துக்குள் உங்களால் நாடாளுமன்றத் தேர்தலோடு, காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்தமுடியவில்லை. நீங்கள்தான் ஒரு நாடு ஒரு தேர்தல் என்று முழக்கமிட்டு வருகிறீர்கள்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356ன் பயன்பாடு எஸ். ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த அரசு அந்தத் தீர்ப்பைப் புறக்கணித்து ஆட்சியைக் கலைக்க வேறு முறைகளைப் பயன்படுத்துகிறது. தற்போது காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறுமாத காலம் நீட்டிப்பதற்கான காரணம் எதையும் இந்த அரசு கூறவில்லை. காஷ்மீரில் ஏன் புதிய அரசு நிறுவப்படக்கூடாது? நீங்கள் ஏன் புதுடில்லியிலிருந்து காஷ்மீர் மாநிலத்தை ஆளத்துடிக்கிறீர்கள்? ஏன் காஷ்மீர் மக்கள் தங்களுக்கான அரசைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையைப் பறிக்கிறீர்கள்? எனவே, மத்திய அரசின் இந்தச் செயல் அவர்களுக்கு மக்களாட்சியின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் தங்களுக்கான ஆட்சியைத் தேர்வு செய்யும் உரிமையைக் கூட இந்த அரசு மறுக்கிறது.

எனவே, நான் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானத்தை எதிர்க்கிறேன். இரண்டாவதாக இடஒதுக்கீட்டுச் சட்டதிருத்த மசோதாவை வரவேற்கும் வேளையில் நாடாளுமன்றத்தில், சட்டமுன் வரைவைத் தாக்கல் செய்து நிறைவேற்றாமல், தேர்தல் அரசியலைக் கருத்தில் கொண்டு அவசரச் சட்டத்தின் மூலம் அதனை நடைமுறைப் படுத்தியதற்கு என் கண்டனத்தைத் தெரிவித்து அமர்கிறேன்.” எனப் பேசியுள்ளார்.