India

சுகாதாரத்துறையில் சரிந்த தமிழகம் - நிதி ஆயோக் அதிர்ச்சித் தகவல் !

நிதி ஆயோக் அமைப்பு ஆண்டுதோறும் மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. உலக வங்கியின் ஒத்துழைப்புடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உதவியுடனும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு தரவுகள் வெளியிடப்படுகின்றன.

நோய்கள் வருமுன் காத்தல், நோயில் இருந்து தற்காக்க விழிப்புணர்வு உண்டாக்குதல், நோய்கள் மேலும் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த 2017-18 ஆண்டுகளை மேற்கோள் காட்டி இந்தாண்டிற்கான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின் படி, சுகாதாரத்தை பொருத்தமட்டில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக கேரளா உள்ளது. மிக மோசமான நிலையில் உத்திர பிரதேச மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது. கேரளாவுக்கு அடுத்தபடியாக முதல் மூன்று இடங்களில் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் முறையே இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் அதிர்ச்சியளிக்கும் விதமாக, தமிழகம் சுகாதாரத்தில் பின் நோக்கி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 3-வது இடத்தில் இருந்து 6 இடங்கள் சரிந்து 9-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது தமிழகம். அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இயங்கும் சுகாதாரத்துறை தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செயல்பட்டதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறியது, எச்.ஐ.வி இருந்த ரத்தத்தை நோயாளிகளுக்கு ஏற்றியது, சுகாதாரமற்ற மருத்துவமனைகள் என தொடர் அலட்சியங்களே தமிழகம் பின்தங்க முக்கிய காரணங்கள்.