India

மூளைக்காய்ச்சலால் உயிரிழப்பு 100-ஆக அதிகரிப்பு : விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்!

பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் சிறுவர்கள் உயிரிழப்பு 100 ஆக அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு மற்றும் பீகார் அரசிடம் தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் சிறுவர்கள், குழந்தைகள் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. பலி எண்ணிக்கை 100-ஐத் தொட்ட நிலையில் 300-க்கும் அதிகமானோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீரிழப்புக் குறைபாட்டால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வெகுவாகக் குறைந்து ஹைப்போக்ளைசீமியா உண்டாகிறது. இதனால் உண்டாகும் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் எனப்படும் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

லேசான காய்ச்சலாகத் தொடங்கும் அறிகுறி, தலைவலி, வலிப்பு என தீவிரமடைந்து உயிரிழப்புக்கு வழிவகுக்கும். இதனைத் தவிர்க்க, இரவுகளில் குழந்தைகள் வெறும் வயிற்றோடு படுக்க அனுமதிக்கவேண்டாம் என அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மூளைக்காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து மத்திய அரசு மற்றும் பீகார் அரசுகளிடம் தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.