India

முலாயம், அகிலேஷ் மீதான சொத்துக்குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை : சிபிஐ

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உத்தர பிரதேச முதல்வராக முலாயம் சிங் யாதவ் 1999 முதல் 2005-ம் ஆண்டு வரை இருந்தபோது ரூ. 100 கோடிக்கு முறைகேடாக சொத்து சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு 2007-ல் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவந்தது.

இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை ஏப்ரல் மாதத்திற்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான புதிய பிரமாணப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

சிபிஐ தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு விவகாரத்தில் அவர்களுக்கு எதிராக எந்த விதமான ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முலாயம் சிங், அகிலேஷ் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆவணங்கள், சாட்சியங்கள், சந்தேகத்துக்குரியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் புகார்களுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.