Priyanka Gandhi
India

“கிராம ஊராட்சி தலைவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பா.ஜ.க” - பிரியங்கா காந்தி சாடல்!

உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் மோடியின் பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அமேதி தொகுதியில் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சமாக பா.ஜ.க வழங்கி வருகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி. அவரை ஆதரித்து பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பா.ஜ.க-வின் தேர்தல் விதிமீறல்களைப் பட்டியலிட்டார்.

Priyanka - Rahul

அப்போது பேசிய அவர், “அமேதி தொகுதிகுட்பட்ட மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை நோட்டீஸாக கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறோம். ஆனால் பா.ஜ.க, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்து வருகிறது.

ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.க-வின் ஸ்மிருதி இராணி தேர்தலுக்காகத்தான் இத்தொகுதிக்கு வந்து போகிறார். அவர் நாடகமாடுகிறார். அதை நம்பி மக்கள் ஏமாறவேண்டாம். ராகுல் அப்படியல்ல; இங்கிருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார் அவர்.” எனப் பேசினார்.