India

நடப்பு நிதி ஆண்டில் அதிகரித்த வேலை வாய்ப்பின்மை : ஆய்வில் அதிர்ச்சி 

இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 4 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் எஞ்சியுள்ள 3 கட்ட வாக்குப்பதிவுக்காக அரசியல் தலைவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் வாக்குறுதியாக, வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்பது மிக முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகிறது. குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்பது இளைஞர்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், நாட்டில் உள்ள வேலை வாய்ப்பின்மை குறித்து பெங்களூருவைச் சேர்ந்த அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த 2015ம் ஆண்டில் 5 சதிவிகிதமாக இருந்த வேலையின்மை 2018ல் 6 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

அதிலும், மோடி அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால் 2016-2018 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 50 லட்சம் பேர் தங்களது வேலையை இழந்திருக்கிறார்கள் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில்லாமலும், குறைந்த படிப்பை கொண்டவர்கள் வேலையை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் நகர்ப்புறங்களில் 7.8 சதவிகிதமும், கிராமப் புறங்களில் 5.3 சதவிகிதமும் வேலையின்மை அதிகரித்துள்ளது என அசீம் பல்கலைகழகம் கூறியுள்ளது. ஆகவே, வேலைவாய்ப்பின்மையை தீர்க்க நகர்ப்புறங்களில் வேலை உறுதியளிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினால் திறமை வாய்ந்த இளைஞர்களும், தொழிலாளர்களும் பயனடைவார்கள் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்த வேலை உறுதியளிப்பு திட்டத்தை இரண்டு வகைகளாக பிரித்து செயல்படுத்தினால் மிகுந்த பயன் தரும் என்று கூறிய பல்கலைக்கழக ஆய்வு அதற்கு விளக்கமும் அளித்துள்ளது.

அதாவது, 12ம் வகுப்பு வரை படித்தவர்களை முதல் பிரிவாகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ, கணினி பயிற்சி மற்றும் ஆங்கிக பயிற்சி பெற்றவர்களை இரண்டாவது பிரிவாகவும் வகைப்படுத்தலாம். இதன் மூலம், அவர்களது கல்வி தரத்தை அடிப்படையாகக் கொண்டு பணி நியமனம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், நகர்ப்புற பகுதிகளில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மற்றும் இதர செலவுகளாக நிர்வாக பராமரிப்பு போன்றவற்றை மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் சம அளவில் பகிர்ந்து அளிக்கலாம் எனவும் அசீம் பிரேம்ஜி பல்கலை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பின்மை குறைவதனாலும் தேசமும் முன்னேறும் என கருத்து தெரிவித்துள்ளது.