India
ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது பாணி புயல் ! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
வங்கக் கடலில் உருவாகி, உச்ச உயர் தீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப்பகுதியில், நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
இதன்காரணமாக கடலோர மாவட்டங்களான புரி, ஜகத்சிங்பூர், கேந்திரபரா, பட்ராக், பாலசோர், மயூர்பன்ஞ், கஜபதி, கஞ்சம், கட்டக் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் போர்க்கால அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். புயல் கரையை கடக்கும் போது, மிக அதிகமான மழைப்பொழிவு இருக்கும் எனவும், மணிக்கு 175 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஒடிசா அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல், பானி புயல் காரணமாக, ஒடிசாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43-க்கும் மேற்பட்ட ரெயில்களை தென்கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல, ஆந்திரப்பிரதேச மாநிலத்திலும் புயலை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒடிசாவில் 28 குழுக்களும், ஆந்திராவில் 12 குழுக்களும், மேற்கு வங்கத்தில் 6 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இவைதவிர கூடுதலாக 30 குழுக்கள் படகுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், தொலைதொடர்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!