Vote Day 
India

உங்களின் விரல்... உரிமைகளின் குரல்...

தேர்தல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிகப்பெரிய ஆயுதம். ஆனால் அந்த ஆயுதம் யாருடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என்பது தான். வாக்களிப்பவர்களின் எதிர்காலத்தையா... ,வாக்கு வாங்குபவர்களின் எதிர்காலத்தையா... எதிர்காலமே இல்லாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய தலைமுறை உள்ளது. இந்தியாவில் இந்த வருடம் மட்டும் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இது கிட்டத்தட்ட தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கு சமமானது. சர்வதேச அரசியலையே ஒற்றை பதிவில் விமர்சிக்கும் தலைமுறை தன்னை ஆளும் அரசை சில ஆயிரங்களுக்கு விற்று விடுமா என்ன?

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இங்குள்ள வரி விதிப்புகள் தொழில்முனைவோர் ஆகும் விகிதத்தை குறைத்திருக்கிறது. படித்து முடித்த பின்பு இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதற்கு உத்திரவாதம் இல்லாத சூழல் இன்று கட்டமைக்கப்பட்டுள்ளது.

உரிமைக்காக போராட்டம் நடத்தும் போது, தன்னை சுற்றியுள்ள மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை பேசும் போதெல்லாம் துப்பாக்கி குண்டுகளும், தடியடிகளும் நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமூக விரோதிகள் என்ற பட்டமும் இன்றைய போராடும் தலைமுறைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.

வளர்ச்சியை முன்னிறுத்தும் அரசியல் என்பது பிரதானமானால் எது வளர்ச்சி என்ற கேள்வியும் எழுவது நியாயம் தானே.

Vote Day

வேலை இல்லை, விவசாயி தற்கொலை செய்து கொள்வான், பணம் செல்லாது, வரி அதிகமாகும், நாட்டை காப்பவர்களுக்கே பாதுகாப்பில்லை. மதக்கலவரங்கள் வெடிக்கிறது, பெண்களுக்கு பாதுகாப்பில்லை இவையெல்லாம் வளர்ச்சியின் குறியீடுகளாக பார்க்க சொல்பவர்களை வளர விடுவது இந்தியாவின் எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்கும் என்பதை இன்றைய தலைமுறை நன்றாகவே அறிந்திருக்கிறது.

பக்கோடா விற்பது வேலைவாய்ப்புகளில் சேரும் , 10 கோடி வேலைவாய்ப்பு என்பது வெறும் வெற்று அறிவிப்புதான் என்பவர்களிடம் இந்திய இளைஞர்கள் எப்படி வேலைவாய்ப்பை எதிர்பார்க்க முடியும்.

இந்தியாவை உலக அரங்கில் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றெல்லாம் போலி செய்திகள் பரப்பப்படுகிறது. தனது பணத்தை எடுக்க முடியாமல் தெருவில் நின்ற காட்சி உலக நாடுகளில் எங்குமே அரங்கேறாத ஒன்று என்ற செய்தியையும் நாம் கடந்துதான் வந்திருக்கிறோம்.

கருத்து சொன்னால் கழுத்தறுக்கப்படும், தேசபக்தி என்ற ஒன்றை வைத்து கலவரத்தை தூண்ட முடியும், மாடு துவங்கி மனிதன் வரை எல்லா விஷயங்களிலும் மதச்சாயம் பூச முடியும் என்ற புதிய உத்திகளை வகிப்பது தவறில்லை... இதனை எதிர்த்து கேள்வி எழுப்புவது தவறு என்பது எந்த விதத்தில் சரி.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லை என்று முடிவு செய்தவர்கள் இருக்கும் வரை எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அவ்வளவு கொள்ளை அடிப்பார்கள். இதனை சரியாக செய்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இன்றைய தலைமுறையின் விரல்களில் உள்ளது.

கார்ப்பரேட்டுகளிடம் பணம் பெற்று துப்பாக்கி துக்குவது... மருத்துவராக வேண்டும் என்பவர்களை தற்கொலை செய்ய வைப்பது... பரிட்சை நடக்கும் இடத்தில் சோதனை என்ற பெயரில் மன ரீதியாக துன்புறுத்துவது, உன் உணவை தீர்மானிப்பது என இதையெல்லாம் இன்னொரு முறை இந்த தலைமுறைக்கு தருவோம் என்பவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய கடமை உங்கள் விரல்களில் தானே இருக்கிறது....

கொள்ளை அடிப்பவர்களை, கொலை செய்பவர்களை, பாசிச ஆட்சி நடத்துபவர்களை, அடிமையாகவே தவழ்பவர்களையெல்லாம் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஒருபோதும் தமிழக மக்கள் ஆளாக மாட்டார்கள் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பது உலகமே அறிந்தது. இன்னொரு முறை உரக்க சொல்லுங்கள்... உங்களின் விரல் உரிமைகளின் குரல் என்று... 100 சதவிகிதம் வாக்களியுங்கள்... இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்.