DMK

“அடி, உதை தாண்டி வேகாத உணவில் வேப்பெண்ணெய் கலந்து..”: சிட்டிபாபுவின் சிறை டைரி - தலைவர் நடந்து வந்த பாதை!

வேகாத உணவில் வேப்பெண்ணெய் கலந்து...

இப்பகுதியில் வாரம் ஒரு நூலைப் பார்த்து வந்த நாம், இந்த வாரம் இரண்டு நூல்களைச் சேர்த்துப் பார்க்க இருக்கிறோம். அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. ஒரே செய்தியை, வேறு வேறு இடங்களில் இருந்தும், வேறு வேறு கோணங்களில் இருந்தும் சொல்லும் நூல்கள் அவை.

இரண்டு நூல்களுமே நம் அன்புக்குரிய கழகத் தலைவர் தளபதி குறித்து எழுதப்பட்டு இருப்பவை. அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பேசும் இரண்டு நூல்களும், அவருடைய `மிசா சிறைவாசம்’ பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகின்றன.

ஒரு நூலை, மறைந்த மூத்தப் பத்திரிகையாளர் சோலை அவர்கள், `ஸ்டாலின்’ என்னும் பெயரிலேயே எழுதியிருக்கிறார். இன்னொரு நூலை தி.மு.கழகத்தைச் சேர்ந்த சிட்டிபாபு எழுதி உள்ளார். சிட்டிபாபு தன் நூலுக்கு முதலில் வைத்த பெயர் `ஆயுள் கைதி அனுபவங்கள்’ என்பது! பிறகு அது `சிட்டிபாபுவின் சிறை டைரி’ என்று மாற்றப்பட்டது.

எழுத்தாளர் சோலையின் நூலை `ஆனந்த விகடன்’ வெளியிட்டு இருக்கிறது. கொள்கை மறவர் சிட்டிபாபுவின் நூலை, தி.மு.கழகத்தின் இளைஞர் அணியே வெளியிட்டுள்ளது!

வாழ்வில் சிறந்த நாள்!

சோலை அவர்கள் எழுதியுள்ள நூல், நம் கழகத்தின் தலைவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது வெளிவந்தது. எனவே, அன்று வரையிலான அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள், தெளிவாகவும், மிகை இன்றியும் அந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்நூல் கூட, தலைவர் என்று எங்கு பிறந்தார் என்பதிலிருந்து தொடங்கப்படவில்லை. அவருடைய சிறை வாசமே நூலின் முதல் இயலாக அமைந்திருக்கிறது!

ஒருவர் பிறந்த நாளைவிட, வாழ்வில் சிறந்த நாள்தானே முதன்மையானது என்று நூலாசிரியர் கருதி இருக்கக்கூடும்!

1976-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி, மிசாவில் அவர் கைது செய்யப்பட்டார். ஓராண்டு அவர் சிறையில் இருந்தார். 1977-ஆம் ஆண்டு ஜனவரியில்தான் வெளிவந்தார். அந்தச் சிறைவாசம் மிகவும் கொடுமையானதாக இருந்தது. எனினும் பிற்காலத்தில் அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்ததாகவும் அந்தச் சிறை நாட்களே அமைந்தன. அதனால்தான் அந்தப் புத்தகம் அங்கிருந்து தொடங்கப்பட்டிருக்கக் கூடும்.

14 முறை கைது!

அதற்குப் பிறகும் பலமுறை நம் தலைவர் சிறை சென்றிருக்கிறார். 2003-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, சென்னை, ராணி மேரிக் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டது வரையில், அந்த நூல் எல்லாவற்றையும் விளக்குகிறது. 14 முறை அவர் கைது செய்யப்பட்டார் என் பதையும், அதற்கான காரணங்களையும், எங்கே, எப்போது, எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பன போன்ற குறிப்புகளையும் இந்நூல் தருகிறது!

இந்நூலுக்கு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் அவர்களும் மிக அருமையான முன்னுரைகளை வழங்கி இருக்கிறார்கள்! தலைவர் கலைஞர் தன் முன்னுரையின் இறுதிப் பகுதியில், `மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, தந்தை மகற்கு ஆற்றும் நன்றி’ என்ற இரண்டு வரிகளும் படிப்பதற்கு எவ்வளவு சுகமானவை என்று எழுதுகிறார். இந்த சுக அனுபவம் அவருடைய வாழ்நாளில் இருந்து பெறப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

வயதில் குறைந்த மேயர்!

சிட்டி பாபுவின் நூலோ, சிறையில் நம் தலைவர் பட்ட துன்பங்களை அருகிருந்து பார்த்து எழுதிய அனுபவப் பதிவு! தன் உயிரைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், தலைவருக்காகத் தன்னையே இழக்கவும் தயாராக இருந்த ஒரு கொள்கை மறவனின் குறிப்புகள் அவை!

சிட்டிபாபு, தி.மு.க. கழகத்தின் நீண்ட நாள் உறுப்பினர். 1959-ஆம் ஆண்டில் முதன்முதலாக தி.மு.கழகம் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியபோது மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அவர்.

1964 -ஆம் ஆண்டில் சென்னை மாநக ரத்தின் மேயராக இருந்தவர். அன்று இருந்தவர்களிலேயே வயதில் மிகக் குறைந்த மேயர் அவர்தான்! `ஹோம் ரூல்’, `கழகக் குரல்’ ஆகிய கழக ஏடுகளில் பணியாற்றிய அனுபவமும் சிட்டிபாபுவுக்கு உண்டு.

சிறை ஆவணம்!

1976-ஆம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கப்பட்டவுடன் கைது செய்யப்பட்டவர்களில் சிட்டிபாபு வும் ஒருவர். சிறையில் இருந்து அவர் உயிரோடு மீண்டதே மிகப்பெரிய செய்தி என்று சொல்ல வேண்டும். சிறையில் நடந்த கொடுமைகளை ஒரு பெரிய ஆவணமாக சிட்டிபாபு பதிவு செய்திருக்கிறார். அடி, உதை இவைகளைத் தாண்டி உணவிலும் கூடப் பல கொடுமைகள் நடந்திருக்கின்றன. `வேகாத உணவில் வேப்பெண்ணெய் கலந்து’ கொடுத்த நிகழ்வைப் படிக்கும் போதே நமக்குக் கசக்கிறது.

அந்த டைரி சிட்டிபாபுவால் எழுதப்பட்டதில்லை என்று கூடச் சிலர் குறிப்பிட்டார்கள். பிறகு பட்வாரி அவர்கள் ஆளுநராக இருந்தபோது அமைக்கப்பட்ட நீதிபதி எம்.எம். இஸ்மாயில் அவர்கள் தலைமையிலான குழு, அது சிட்டி பாபுவின் கையெழுத்துதான் என்பதை உறுதி செய்தது!

இன்று தமிழ்நாட்டின் முதலமைச்ச ராக வீற்றிருந்து, தமிழ்நாட்டு மக்களுக்குப் பல்வேறு நன்மைகளைத் தந்து கொண்டிருக்கும், திராவிட மாடல் ஆட்சியைச் செவ்வனே நடத் தும் நம் தலைவர் நடந்து வந்த பாதை எவ்வளவு கரடுமுரடானது என்பதை இந்நூல்கள் நமக்குப் புரிய வைக்கும்.

தி.மு.கழகத்தின் இளைஞர்களுக்கு ஊக்கமும் உரமும் தரும்!

Also Read: “ஸ்டாலினின் இந்த வெற்றிப்பயணம்; வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய புதுமைப் பயணம்” : அன்றே சொன்னார் கலைஞர்!