DMK

“உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போகிறோம்” - சாதனை நிகழ்வில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் இன்று (16-02-2021) காலை, 6,000 கழகத் தோழர்களை ஒரே இடத்தில் 'உதயசூரியன்' வடிவத்தில் நிறுத்தி, கழக வெற்றிச் சின்னமான உதயசூரியனை உலக அளவில் கொண்டுசெல்லும் முயற்சியாக "உதயசூரியன் - உலகசாதனை" - 'மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் சின்னம் உதயசூரியன்' ( THE LARGEST HUMAN IMAGE OF A POLITICAL PARTY EMBLEM - 'THE RISING SUN') எனும் ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-ல் இடம்பெறும் சாதனை படைக்கின்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி, சென்னை கொட்டிவாக்கம் பகுதியிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, சாதனை படைத்திட்ட கழகத் தோழர்களை வாழ்த்தியதோடு, அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டார்.

சாதனை படைத்திட்ட கழகத் தோழர்களை வாழ்த்தி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உலக சாதனை படைக்கும் வகையில் நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன் அவர்கள், இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முதலில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த உலக சாதனை படைத்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிற அதே நேரத்தில், விரைவில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில், நான் சில நாட்களுக்கு முன்னால் 234 இடங்களில் 200 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று குறிப்பிட்டுச் சொன்னேன். ஆனால் அதைச் சொல்லிவிட்டு பிரச்சாரத்தை மேற்கொள்கிறபோது, மக்களிடத்தில் காண்கின்ற எழுச்சியும் அந்த ஆர்வமும், ஆரவாரமும் 200 அல்ல, 234க்கு 234 இடங்களிலும் நிச்சயமாக தி.மு.க. அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, எப்படி இன்றைக்கு நீங்கள் உலக சாதனை படைத்து இருக்கிறீர்களோ, அதேபோல நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் - தமிழகத்தில் இந்தத் தேர்தல் நடந்தாலும், இந்திய அளவில், ஏன் உலக அளவில் ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப் போகிறோம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

எனவே இதை அமைத்துத் தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகளை, பாராட்டுக்களை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.” எனப் பேசினார்.

Also Read: “தமிழக மக்களுக்கு முன்னேற்றம், வளர்ச்சி, பெருமையை தேடித் தருவதே திமுகவின் இலக்கு” - மு.க.ஸ்டாலின் உரை!