DMK
“இனி இப்படிப்பட்ட பொய்களை பேசினால், சட்ட நடவடிக்கையை தி.மு.க எடுக்கும்” : ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை !
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட கூட்டத்தினர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்கு, கூட்டம் கூட்டமாய் முண்டியடித்துக் கொண்டு சென்ற காட்சியை கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலின் காரணமாக இப்படி அண்ட புளுகை - ஆகாச புளுகை புளுகியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள், ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் உரையாற்றும்போது, உண்மை பேசுவதற்குப் பதிலாக, “ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்தில் நினைவிடம் கட்டக்கூடாது என்று பினாமிகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்" என தி.மு.க. தலைவர் தளபதி அவர்கள்மீது ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’யாகப் பேசியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தை, ஜா-ஜெ. என்ற கோஷ்டி சண்டையில் அம்போ என்று விடப்பட்டபோது, 1989-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள், பெருந்தன்மையோடு எம்.ஜி.ஆர். நினைவிடத்தை பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அதே பெருந்தன்மையோடுதான், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் விவாகரத்தில் நடந்து கொண்ட எங்கள் தலைவர் தளபதி அவர்கள்மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட கூட்டத்தினர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்கு, கூட்டம் கூட்டமாய் முண்டியடித்துக் கொண்டு சென்ற காட்சியை கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலின் காரணமாக இப்படி அண்ட புளுகை - ஆகாச புளுகை புளுகியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி.
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பினை அறிவித்தபோதும் சரி - அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் திரு.பழனிசாமி அறிவித்தபோதும் சரி, எதிர்க்கட்சித் தலைவரான கழகத் தலைவர் தளபதி அவர்களோ அல்லது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களோ அதற்கு எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை என்பது ஊரறிந்த உண்மை.
ஆனால், ‘ஜெயலலிதா நினைவிடம் கட்டக்கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள், பழனிசாமி கூட்டணியில் இன்று இடம்பெற்றுள்ள பா.ம.க. கட்சியினர்தான் என்பதை ஏனோ பழனிசாமி ‘முழு பூசணிக்காயை சேற்றில் மறைப்பதைப் போல’ பேசியிருக்கிறார். இந்த போக்கு ஜெயலலிதாவுக்கு, இவர் செய்கின்ற பச்சை துரோகம் அல்லவா?
நான்காண்டு காலமாக ஆட்சியில் இருந்த இவர், இதுவரை இதுபற்றி வாய் திறக்காமல், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தொடர்ந்து இவர் செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது.
முதலமைச்சர் பழனிசாமி அவர்களது இப்போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது. இனியும் இப்படிப்பட்ட பொய்களை பேசி வருவாரேயானால், இவர்மீது சட்ட நடவடிக்கையை தி.மு.க. எடுக்கும் என எச்சரிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !