DMK

“உண்மைகளை மறைக்காமல் மாவட்ட வாரியாக கொரோனா புள்ளி விவரங்களை வெளியிடுக” - தி.மு.க எம்.எல்.ஏ பொதுநல மனு!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கோரியுள்ளார்.

மதுரை மத்திய தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எத்தனை பேருக்கு நடத்தப்பட்டுள்ளது ? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? பலியானவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? போன்ற விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வந்தாலும், அதில் முழுமையாக தகவல் இல்லை. முழுமையான தகவலை வெளியிடாவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது.

மதுரையில் ஜூலை 5 முதல் 12 வரையிலான முழு ஊரடங்கு நடவடிக்கையோ, அரசின் பிற நடவடிக்கைகளோ கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சாதகமான முடிவை ஏற்படுத்தவில்லை.

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மதுரையில் அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால், பிற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு பகுதியில் முழு ஊரடங்கையும், மற்றொரு பகுதியில் தளர்வுகளையும் அமல்படுத்துவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லை தாண்டிச் செல்வதும், சரக்குகளை பதுக்குவதும், கொரோனா பரவக் காரணமாக அமைகிறது.

கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனாவின் தாக்கத்தை முழுமையாக அரசு வெளியிட்டால்தான், சூழலை உணர்ந்து தனிமைப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாகக் கடைபிடிப்பார்கள்.

மாவட்ட வாரியாக மேற்கொண்ட சோதனை விவரங்கள், குணமடைந்தோர் எண்ணிக்கை, படுக்கைகள் உள்ள மருத்துவமனைகள், மாதிரிகள் சேகரிக்கும் மையங்கள் ஆகியவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக 3 வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read: தி.மு.க ஆட்சியில் தலைவர் கலைஞரின் திட்டங்களும்.. பள்ளிக்கல்வித் துறையின் மேம்பாடும்..! #TNrejectsNEP