DMK

#CAA கையெழுத்து இயக்கத்தின் நோக்கத்தை விளக்கி மணமக்கள் & குடும்பத்தாரிடம் கையொப்பம் பெற்ற தி.மு.க தலைவர்!

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு வடிவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் எதிர்க்கட்சியான தி.மு.க, சிறுபான்மையினரைப் புறக்கணிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கட்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்தார். நேற்று, சென்னை தேனாம்பேட்டை பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென்று சாலையில் இறங்கி கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டார்.

பொதுமக்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் தீமைகள் குறித்து விளக்கி, கையெழுத்துப் பெற்ற அவர், சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகளில் ஏறியும் பயணிகளிடம் கையெழுத்துகளைப் பெற்றார்.

இந்நிலையில், இன்று திருமண விழாவில் பங்கேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு கையெழுத்து இயக்கத்திற்கான நோக்கத்தை விளக்கியதையடுத்து மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவரும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கையொப்பமிட்டனர்.

சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகியும் வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மறைந்த சுப்பிரமணி - சரஸ்வதி ஆகியோரின் மகன் கமலநாதனுக்கும், வெங்கடேசன் - ஜெயமணி ஆகியோரின் மகள் ஜெபமணிக்கும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமண விழாவின்போது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் நடத்தும் கையெழுத்து இயக்கத்தை மணமகளிடம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளக்கினார். இதையடுத்து மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கையொப்பமிட்டனர்.

இதேபோல, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளரும், ஜெயராமன் - விமலா தம்பதியரின் மகனுமான ஜெயராஜுக்கும், கருணாகரன் - சகிலா ஆகியோரின் மகள் தமிழரசிக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார்.

இத்திருமண விழாவின்போதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கான நோக்கத்தை விளக்கியதையடுத்து மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கையொப்பமிட்டனர்.

Also Read: "கையெழுத்துப் படிவங்களை மலையெனக் குவிப்போம்; மத்திய மாநில அரசுகளின் முகத்திரை கிழிப்போம்” - மு.க.ஸ்டாலின்