DMK

’அ.தி.மு.க மக்களுக்கு எதையும் செய்யாது’ : தி.மு.க.,வில் இணைந்த எடப்பாடியின் அண்ணன் சொல்லும் உண்மை !

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெரியம்மா மகனுமான விஸ்வநாதன் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து தி.மு.க.,விற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தொடர்ந்து கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இன்று காலை பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பி.டி அரசகுமார், மு.க ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து எடப்பாடியின் சகோதரரரும், அ.தி.மு.க பிரமுகருமான விஸ்வநாதனும் கட்சியில் இணைந்தார்.

அப்போது சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது, அ.தி.மு.க.,வில் ஜனநாயகம் இல்லை என்பதால் தி.மு.க.,வில் இணைந்ததாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அண்ணன் தி.மு.க.வில் இணைந்துள்ளது அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.