DMK

உள்ளாட்சித் தேர்தலை மூன்றாண்டுகளாக அ.தி.மு.க அரசு திட்டமிட்டு நடத்தவில்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தஞ்சை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதி அ.தி.மு.க, பா.ஜ.க, அ.ம.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் டாக்டர் சந்திரசேகர் தலைமையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்..

அப்போது பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தாய் கழகமான திமுகவில் வந்ததற்கு வரவேற்கிறேன். பெரும்பாலும் கட்சியில் இணைபவர்கள் ஆளுங்கட்சியை நோக்கி செல்வார்கள்.

அப்பொழுது தான் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று செல்வார்கள். ஆனால், எதிர்க்கட்சியான தி.மு.க.வில் இணைந்து உள்ளீர்கள். விரைவில் தி.மு.க ஆளும்கட்சியாகும்.

தற்போதைய எடப்பாடி அரசு நாட்டை எப்படி கொள்ளையடித்து குட்டிச்சுவராக்கி உள்ளது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த ஆட்சியை அகற்றுவதற்கு நீங்கள் அயராது உழைத்து தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்க நீங்கள் வந்துள்ளீர்கள்.

பட்டுக்கோட்டை விஸ்வநாதன் நம் தி.மு.க.வின் முன்னாள் உறுப்பினர் ஆவார். தற்போது அவர் மாற்றுக் கட்சியில் இருந்தாலும் அவரது அண்ணன் மகனான டாக்டர் சந்திரசேகர் அவர் விட்டு சென்ற பணியை செய்ய வந்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் செய்யும் அக்கிரமங்களை சுட்டிக்காட்டினால் அவருக்கு கோபம் வருகிறது. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அல்ல சசிகலாவின் காலில் மண் புழு போல விழுந்து சென்று முதலமைச்சர் பதவியை வாங்கியவர்.

எனக்கு முதலமைச்சர் ஆக வில்லை என்று கோபம் வருவதாக பொய்யான செய்தியைக் கூறி வருகிறார். யார் காலிலும் விழுந்து மண் புழு போல சென்று எனக்கு முதலமைச்சராக வேண்டிய தேவையில்லை.

உள்ளாட்சித் தேர்தலை மூன்றாண்டுகளாக அ.தி.மு.க அரசு திட்டமிட்டு நடத்தவில்லை. அதிமுக வழக்கு போட்டு தடுத்ததாக குற்றம் சாட்டி வருகிறார்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி மன்ற கூட்டங்களை நடத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க உறுப்பினர்கள் வெற்றிபெற்று மக்கள் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைப்பார்கள்'' எனத் தெரிவித்தார்.