DMK

“மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியபடி பேனர்கள், கட்-அவுட் வைக்கமாட்டோம்” - தி.மு.க பிரமாண பத்திரம் தாக்கல்!

சென்னையில் கடந்த வாரம், அ.தி.மு.கவினர் சட்டவிரோதமாக வைத்த பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்து, தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. அதில், அரசுக்கும், பேனர் வைக்க அனுமதியளித்த அரசு அதிகாரிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

மேலும், சட்டவிரோத பேனர்கள் வைக்கமாட்டோம் என அனைத்து அரசியல் கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் நீலகண்டன் ஆகியோர் நீதிபதிகளிடம் முறையிட்டு பேனர் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

அதில், கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள், ப்ளக்ஸ் போன்றவற்றை வைக்கக்கூடாது என கட்சியினருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத பேனர்கள் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நீதிமன்ற உத்தரவை மீறி பிற கட்சியினர் சட்ட விரோதமாக பேனர் வைப்பதை எதிர்த்து தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.