DMK

சென்னை வந்தார் மம்தா : மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!

சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முரசொலி அலுவலகத்தில் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். அவரை தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தமிழகத்திற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் மம்தா பானர்ஜி. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டனர்.

நாளை நடைபெறவிருக்கும் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கலந்துகொள்வதாக இருந்தது. ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையொட்டி அவரது வருகை கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.