DMK

ஜூலை 20 : தி.மு.க இளைஞரணி உருவான நாள்... இளைஞரணியின் பயணம் - அன்று முதல் இன்று வரை... !

தி.மு.க-வின் இன்றைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அன்று ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’ எனத் தொடங்கப்பட்ட அமைப்பே தி.மு.க-வின் இளைஞரணியாக உருவெடுத்தது. பின்னாட்களில் இளைஞரணியின் செயல்வன்மைமிகுந்த நிர்வாகிகளால் கழகத்தின் முக்கிய அங்கமாக உருவெடுத்தது இளைஞரணி.

இத்தகு சிறப்பு வாய்ந்த இளைஞரணி தொடங்கப்பட்ட நாள் இன்று. 1980ல் ஜூலை 20ம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் தலைவர் கலைஞர் அவர்களால் தி.மு.க-வின் இளைஞரணி தொடங்கப்பட்டது. இந்திய அரசியலில் மாநிலக் கட்சி ஒன்று தொடங்கிய முதல் இளைஞரணி தி.மு.க இளைஞரணிதான். 1981ல் இளைஞரணி அமைப்பாளர்கள் ஐந்து பேரில் ஒருவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

1982ம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கழக இளைஞரணியின் அமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார் தளபதி மு.க.ஸ்டாலின். பின்னர் இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கினார்.

கழகத்தின் தலைமை அலுவலகமாக இருந்த அன்பகம் கட்டடத்தை இளைஞரணியின் அலுவலகமாகப் பெறுவதற்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 11 லட்ச ரூபாய் நிதி திரட்டி அதனை கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனிடம் வழங்கி, அன்பகத்தை இளைஞரணியின் தலைமை அலுவலகமாக்கினார் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க எதிர்க்கட்சியாக செயலாற்றும் காலகட்டங்களில் தலைவர் கலைஞர் அறிவித்த போராட்டங்களை முன்னின்று நடத்தியதில் இளைஞரணிக்கு முக்கியப் பங்கு உண்டு. இலங்கைத் தமிழர் நலன் காக்கும் போராட்டம், இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தும் போராட்டம் ஆகியவற்றுக்காக இளைஞரணியினர் பெருமளவில் திரண்டு போராட்டம், மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றனர்.

வலியுறுத்தும் போராட்டங்களின் வடிவமான ஊர்வலம் என்ற சொல் மாறி, பேரணி என்ற சொல் நடைமுறைக்கு வந்ததற்குக் காரணம் கழக இளைஞரணியின் இராணுவ மிடுக்கு போன்ற அணிவகுப்புதான்.

39 ஆண்டுகளுக்கு மேலாக வலிமையாகச் செயல்பட்டு வருகிறது தி.மு.க இளைஞரணி. இந்தியாவில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான இளைஞரணியைப் பெற்றிருக்கும் பேரியக்கமாகத் திகழ்கிறது தி.மு.க.

தற்போது புதிதாக இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆசியோடும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடும் இளைஞரணிக் கூட்டங்களை நடத்தி, மாநிலம் முழுக்கச் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டுள்ளார். தி.மு.க இளைஞரணி - தொடங்கப்பட்டதன் இலக்கு நோக்கிக் கொள்கை முழக்கங்களுடன் வீறுநடை போட்டு வருகிறது.