Cinema
“‘தங்கலான்’ படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை...” - திரும்பப்பெறப்பட்ட நிபந்தனை - பின்னணி என்ன ?
தமிழ் சினிமா உலகில் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா. இவர் தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் விநியோகஸ்தரும் ஆவார். இவர் பல ஹிட் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தை இவர்தான் தயாரித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், நாளை (ஆக.15) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் .நடித்துள்ளனர். இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் இந்த படம் வெளியிடுவதற்கு முன்பாக ஞானவேல் ராஜா ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதாவது சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பலரும் கடன் வாங்கி வந்துள்ளனர். இப்படி தொடர்ந்து பலருக்கும் கடன் கொடுத்து நிதி இழப்பு ஏற்பட்ட நிலையில், அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டு இறந்து விட்டார்.
இதையடுத்து அவருடைய சொத்துகளை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் கடன் வாங்கியவர்களிடமிருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அர்ஜூன்லாலிடம் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ரூ. 10.35 கோடி பணத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் கடனாக பெற்றது.
இந்த தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தக் கோரி சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பங்குதாரர்களான ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதையடுத்து அண்மையில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார் சொத்தாட்சியில். அந்த மனுவில், "ரூ.10 கோடியே 35 லட்சம் கடன் தொகைக்கு, 2013-ம் ஆண்டு முதல் 18% வட்டி, வழக்கறிஞர் கட்டணம் சேர்த்து ரூ.26.34 கோடியை ஸ்டாடியோ கிரீன் நிறுவனம் தர வேண்டும். இந்த தொகையை வழங்காததால் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களை திவாலானவர்கள் என அறிவிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்த நிலையில், 'தங்கலான்' படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அதேபோல் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தயோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக்கி வரும் 'கங்குவா' திரைப்படம் வெளியிடும் முன்பும் ரூ.1 கோடி டெபாசிட் செலுத்தவும் உத்தரவிட்டு வழக்கு இன்று (ஆக.14) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி நிபந்தனையால் திரை வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்படுமா? என்ற சந்தேகமும் எழுந்தது. இந்த சூழலில் தற்போது 'தங்கலான்' திரைப்பட வெளியீட்டுக்குத் தடையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது நீதிமன்றத்தின் உத்தரவின்படி ரூ.1 கோடி சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நீதிமன்றம் சொன்னபடி பணம் டெபாசிட் செய்யப்பட்டதால் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும் ரூ.10 கோடி கடனை செலுத்தாத விவகாரம் தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 28-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!