Cinema

குடும்பம் தான் எல்லாமே : நடிப்பில் இருந்து ஓய்வு.. சென்னையில் இருக்க முடிவு செய்த ஆமீர் கான் !

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆமீர் கான். 1973-ம் ஆண்டு நடிக்க தொடங்கிய இவர், தற்போது வரை இந்தி சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு என்று பாலிவுட்டில் தனி ரசிகர்களே உள்ளனர். இவர் நடித்த படங்கள் பல தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் ரீ-மேக், டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படம் 'நண்பன்' என்ற பெயரிலும், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'தங்கல்' படம் பல்வேறு மொழிகளிலும் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து சில படங்கள் நடித்திருந்தாலும் கடந்த ஆண்டு திரையரங்கில் பான் இந்தியா படமாக வெளியான 'லால் சிங் சத்தா' எதிர்பார்த்த அளவில் ஆமீருக்கு கைக்கொடுக்கவில்லை.

அந்த சமயத்தில் ஆமீர் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு கும்பல் எதிர்ப்பு தெரிவித்ததால் படம் பெரிதாக பேசப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவர் அடுத்து நடிக்க வேண்டிய படமான 'சாம்பியன்ஸ்' படத்திலிருந்து விலகுவது மட்டுமின்றி, நடிப்பில் இருந்தே சிறிது காலம் ஓய்வு பெறவுள்ளதாக நடிகர் ஆமீர் கான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் அதில் இருந்து விலகி, வேறொரு நடிகரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளேன். அதோடு சோனி நிறுவனத்துடன் இணைந்து இதனை தயாரிக்கவுள்ளேன். நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்.

கடந்த 35 ஆண்டுகளாக எனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனவே நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்று அவர்களுடன் நேரம் ஒதுக்க முடிவு செய்திருக்கிறேன்" என்றார். இவரது இந்த முடிவு பாலிவுட் வட்டாரத்தில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், தற்போது இவர் சென்னையில் சில காலம் இருக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆமீர் கான் - தாய் ஜூனத் உசேன்

ஆமீர் கானின் தாய், ஜூனத் உசேனுக்கு (Zeenat Hussain) அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். தற்போது அவரது தாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரை கவனித்துக்கொள்ள, அவருக்கு உறுதுணையாக இருக்க ஆமீரும் சில மாதங்கள் சென்னையில் இருக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் அவரை அனுமதித்துள்ள மருத்துவமனை அருகிலே ஹோட்டலில் தங்கப்போவதாகவும் கூறப்படுகிறது. குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க எண்ணிய ஆமீர் கான், தற்போது உடல்நிலை சரியில்லாத தாய்க்கு உறுதுணையாக இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதோடு அவரது தாய்க்கு விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அதிமுக ஆட்சியில் மாநிலத்தையே உலுக்கிய சம்பவம் : திரைப்படமாகும் வாச்சாத்தி வன்கொடுமை - இயக்குநர் யார் ?