Cinema
கோயிலில் வைத்து முத்தம்.. சர்ச்சையில் சிக்கிய ‘ஆதிபுருஷ்’ குழு.. கண்டனம் தெரிவிக்கும் பாஜக -பின்னணி என்ன?
இந்திய இதிகாசம் என்று சொல்லப்படும் 'இராமாயணம்' கதையை தழுவி எடுக்கும் படம் தான் 'ஆதிபுருஷ்'. பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராமராக பிரபாஸும், சீதாவாகி கிரீத்தி சனோனும், இராவணனாக சைப் அலிகானும் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் பெரும் நகைப்பை ஏற்படுத்தியதோடு, இதனை பெரிய கன்டென்டாகவும் மாற்றி கிண்டல் செய்து வந்தனர்.
தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து, டெம்பிள் ரன், கார்ட்டூன் படம், அனிமேஷன் படம் என்று செம்மயாக கலாய்த்து தள்ளினர். டீசரை தொடர்ந்து ட்ரைலர் வெளியானபோதும் அதே போல் நெட்டிசன்கள் கிண்டலடித்து மீம் செய்து வந்தனர். மேலும் இந்த படத்தின் புது ட்ரைலர் என்று கூறி, வேறொரு ட்ரைலரை வெளியிட்டபோதும், அதனையும் கலாய்த்தனர்.
இந்தி படமான இது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா படமாக வரும் 16-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு அனைத்து திரையரங்கிலும் அனுமனுக்கு ஒரு தனி இருக்கை விடப்படும் என்று அறிவித்துள்ளனர். படக்குழுவின் இந்த அறிவிப்பை அடுத்து, இந்த படமானது காமெடி படமாக நெட்டிசங்கள் மீம் உருவாக்கி நக்கல் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் படம் வெளியாவதை முன்னிட்டு படக்குழு இன்று ஆந்திராவிலுள்ள திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அப்போது தரிசனத்தை முடித்து விட்டு நடிகை க்ரீத்தி, தனது காரில் ஏறும் முன்னர், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது க்ரீத்தியை இந்த படத்தின் இயக்குநர் ஓம் ராவத் கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். மேலும் அவருக்கு Flying முத்தமும் கொடுத்தார்.
தொடர்ந்து படக்குழுவினர் அனைவரையும் கட்டி பிடித்து பின்னரே தனது காரில் ஏறி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கோயிலில் வைத்து நடிகைக்கு முத்தம் கொடுத்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு ஆந்திராவிலுள்ள பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆந்திர பாஜக செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி அளித்த பேட்டியில், "திருமலை திருப்பதி கோவிலின் மரபுகளுக்கு எதிராக கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், பறக்கும் முத்தங்கள் போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவது ஏன்?. இது வெங்கடேசப் பெருமானின் பல பக்தர்களை புண்படுத்தியுள்ளது. திரைப்பட நடிகை, திரைப்பட தயாரிப்பாளர் அப்படி நடந்து கொண்டதால், அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இது ஒரு புனிதமான இடம், ஷூட்டிங் ஸ்பாட் அல்ல. இதை TTD (திருமலை திருப்பதி தேவஸ்தானம்) அதிகாரிகள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் ஆந்திர பாஜக மாநிலச் செயலாளர் ரமேஷ் நாயுடு, தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் கோமாளித்தனங்களை புனிதமான இடத்திற்கு கொண்டு வருவது உண்மையில் அவசியமா? திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலுக்கு முன்பாக கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது போன்ற பாசத்தின் பொது காட்சிகளில் ஈடுபடுவது மரியாதைக்குறைவாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் கருதப்படுகிறது." என்று குறிப்பிட்டார். பின்னர் சில நிமிடங்களிலேயே அந்த ட்வீட்டை அவர் நீக்கினார்.
இந்த சம்பவத்தால் தற்போது ஆதிபுருஷ் படக்குழு சர்ச்சையில் சிக்கியுள்ளது. முன்னதாக நேற்று இந்த படத்தின் இறுதி ட்ரைலர் வெளியானது. இத்தனையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து, மீம் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!