Cinema

#FactCheck: மதம் மாறியதாக வதந்தி பரப்பும் பாஜகவினர்.. 2020 ம் ஆண்டு முதலே மணிமேகலை கொடுத்து வரும் பதிலடி!

பிரபல தனியார் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஷோ ஒன்றில் விஜேவாக அறிமுகமானவர் தொகுப்பாளர் மணிமேகலை. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுப்பாளராக இருந்த இவருக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது. இதன் எதிரொலியாக அவருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருக்க வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து அவர் பல ஷோக்களில் தனது திறமையை வெளிப்படுத்திய பிறகு, மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் சேர்ந்தார். அங்கே இவருக்கு மேலும் பிரபலம் கிடைத்தது. தொடர்ந்து அந்த தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தார். 90ஸ் கிட்ஸை தொடர்ந்து 2கே கிட்ஸ்களுக்கு பிடித்த தொகுப்பாளராக மாறினார்.

அதே தனியார் தொலைக்காட்சியில் 'குக்கு வித் கோமாளி' ஷோவில் பங்கேற்றார். தொடர்ந்து பல சீசன்களில் பங்கேற்று வந்த இவர், தற்போது ஒளிபரப்பாகும் சீசனில் இருந்து அண்மையில் வெளியேறினார். இருப்பினும் தனது சில ஷோக்களை இவர் விடவில்லை. இடையில் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்த போதிலும், அதில் ஆர்வம் காட்டாமல், தனது தொகுப்பாளர் பணியையே தொடர்ந்து செய்து வருகிறார்.

இதனிடையே இவருக்கும் ஹுசைன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் மதத்தை காரணம் காட்டி சம்மதிக்கவில்லை என்பதால், இருவரும் தங்கள் குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

அதன்பிறகு இருவரும் தங்கள் வாழ்வில் முன்னேறி சாதித்து காட்ட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகின்றனர். அதன்படி இவர்களுக்கு என்று தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் வீடியோ பதிவிட்டு வருவதோடு, தனியாக விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர்; பேட்டிகளும் எடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் தற்போது மணிமேகலை இசுலாம் மதத்துக்கு மாறிவிட்டதாக கூறி, இவர்களது புகைப்படங்களை பதிவிட்டு பாஜக ஆதரவாளர்கள் பாஜகவினர், என வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதாவது இதுகுறித்து வெளியான புகைப்படத்தில் மணிமேகலை 2017-ல் திருமணத்தின் போது எடுத்துக்கொண்டதும், பிறகு 2020-ல் ரம்சான் தினத்தின்போது அவர் இஸ்லாமிய தோற்றத்தில் இருப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும் இதனை பகிர்ந்து 'லவ் ஜிகாத்' என்று கூறி பாஜகவினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து இணையத்தில் சோதனை செய்தபோது 2017-ம் ஆண்டு மணிமேகலை திருமணத்தின்போது தங்கள் புகைப்படத்தை வெளியிட்டு 'காதலுக்கு மதமில்லை' என்று வெளியிட்டு குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து 2020-ல் ரமலான் பண்டிகையின்போது அவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து "எல்லாரும் என்னிடம் பிரியாணி கேட்கிறார்கள்.. ஒரே நகைச்சுவையா இருக்கு போ.." என்று கலகலப்பாக பதிவிட்டிருந்தார்.

இது வெளியான புதிதிலே இவர் மதம் மாறிவிட்டதாக வதந்திகள் பரவ தொடங்கியது. அப்போதே அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் "Happy Ramzan சொல்றதுக்கு எல்லாம் மதம் மாறிட்டு தான் சொல்லனுமா?.. யாரும் இங்க மதம் மாறல.. ஹுசைன் என்னுடன் கோயிலுக்கு வருவார்; நாங்கள் ரமலான் கொண்டாடுவோம். நாங்கள் இதில் தெளிவாக இருக்கிறோம். உங்க குழப்பத்தை இங்கே கொண்டு வராதீங்க.." என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் இவர்கள் குறித்தும், மணிமேகலை மதம் மாறிவிட்டதாகவும் பாஜகவினர் 2017-ல் & 2020-ல் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து போலியான தவறான செய்தியை பரப்பி வருகிறது. குறிப்பாக மீடியான் இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் சரவண பிரசாத் பாலசுப்ரமணியன் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து இதற்கு மீண்டும் மணிமேகலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இப்படி வாழ்க்கை முழுவதும் உளறிட்டே இருக்குறதுக்கு, போய் உறுப்படுற வழிய பாக்கலாம்லா.." என்று குறிப்பிட்டுள்ளார். இப்படியே பொய் செய்தியும் வதந்தியும் பரப்பிவருவதே சங்கிகளுக்கு வேலை என்று இணையாவசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் தங்க, வைர நகைகளை திருடிய பணிப்பெண்.. உடனிருந்த Driver.. - வெளியான பகீர் தகவல் !