Cinema

'லியோ' படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகல்?.. உண்மை என்ன?: லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவில் கோடிக் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியைச் சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைக் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த 11-ம் தேதி வெளியானது. அப்போது நடிகர் அஜித் நடித்த துணிவு படமும் வெளியானது. இதனால் துணிவா? வாரிசா? என்ற போட்டி நிலவி வந்த நிலையில் துணிவுடன் வாரிசு வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதை அடுத்து நடிகர் விஜயின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. இந்த கூட்டணியில் ஏற்கனவே 'மாஸ்டர்' படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கிறது. விஜயின் T67 படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் T67 படத்திற்கு 'லியோ' என பெயர் வைத்துப் படத்தின் டைட்டில் வீடியோ அண்மையில் வெளியானது.

மேலும் 'லியோ'படத்தின் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய், த்ரிஷா ஜோடி இணைந்துள்ளது. இதனால் இவர்களது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதற்கிடையில் படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். இதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. அப்போது விமானத்தில் செல்லும் போது விஜய் பக்கத்தில் த்ரிஷா இருக்கும் புகைப்படம் வெளியானது.

இந்நிலையில் படக்குழு முழுவதும் காஷ்மீரில் இருக்கும் நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் சென்னைக்குத் திரும்பிய புகைப்படங்கள் வெளியானது. இதனால் அவர் லியோ படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தகவல் வைரலாகி வருகிறது.

இதையடுத்து இந்த தகவலுக்கு நடிகை த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணா மறுத்துள்ளார். இது குறித்துக் கூறிய அவர், "லியோ படத்தின் பட பிடிப்பிற்காக த்ரிஷா காஷ்மீருக்கு சென்றுள்ளார். அவர் நடிக்கும் முக்கிய காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருகிறது. அவர் 'லியோ' படத்தில் இருந்து விலகியதாகப் பரவும் செய்தி தவறானது" என தெரிவித்துள்ளார்.

அதேபோன்று விஜய் - த்ரிஷா இணைந்து நடித்துள்ள படங்களின் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷா லைக் செய்து வருகிறார். இதனால் நடிகை த்ரிஷா லியோ படத்திலிருந்து விலகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Also Read: “இனி இவரு தான் ஹீரோ.. PROFESSOR இல்ல” -வெளியானது MONEY HEIST-ன் UPDATE: எப்போது வெளியாகும்? -முழு விவரம்!