Cinema

ரஜினி, கமலுக்கு சண்டை சொல்லிக்கொடுத்த பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் திடீர் மறைவு.. திரையுலகினர் இரங்கல் !

தமிழ் சினிமாவில் இன்றியமையாத ஒன்றுதான் சண்டை. பெரும்பாலும் மக்கள் படத்தை பார்த்து அதில் வரும் அநீதி காட்சிகளை கண்டு ஹீரோ உடனே சண்டை செய்ய வேண்டும் என்றுதான் எண்ணுவர். அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சினிமாவில் சண்டை காட்சிகள்.

ஆனால் காயமில்லாமல் சண்டை செய்யவேண்டும் என்று அதற்காக பயிற்சியாளர் என்று தனியாக ஆட்கள் உருவாக தொடங்கினர். எம்.ஜி.ஆர்., காலம் முதல் தற்போதுள்ள காலக்கட்ட வரை அனைத்து சினிமாக்களிலும் சண்டை என்ற ஒன்று பிரதானமானதாக இருக்கிறது.

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல் சினிமாவை சண்டைக்காவே ரசிகர்கள் கண்டு களிப்பர். அப்படி அவர்கள் திரைப்படத்திற்கு சண்டை பயிற்சி சொல்லிக்கொடுத்த பயிற்சியாளர்களில் ஒருவர்தான் ஜூடோ ரத்தினம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1,500 திரைப்படங்களுக்கு மேல் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

எ.ம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார், பிரேம் நசீர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். முத்துராமனின் 'காசேதான் கடவுளடா', ரஜினியின் 'முரட்டுக்காளை', கமலின் 'சகலகலா வல்லவன்', என பல படங்களில் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

மேலும் தாமரை குளம், ரஜினியின் 'போக்கிரி ராஜா', சுந்தர் சியின் 'தலைநகரம்' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். அதோடு 1200க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்ததற்காக இவர் 'கின்னஸ் ரெக்கார்ட்ஸ்' சாதனையும் படைத்துள்ளார்.

அதன்பிறகு திரையுலகில் இருந்து சற்று ஓய்வெடுத்த ஜூடோ ரத்தினம், அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் வசித்து வந்த வயது மூப்பு காரணமாக ஜூடோ, தனது 93-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.