Cinema

“சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றது ‘நாட்டு நாட்டு’ பாடல்” - எம்.எம்.கீரவாணி யார் தெரியுமா?

தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி, பாகுபலி 1, 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்கிய படம் தான் RRR. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படத்தில் என்.டி.ஆர், ராம்சரண், அலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவான இப்படம், இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் மாஸ் ஹிட் கொடுத்தது.

இந்தாண்டு வெளியான சிறந்த இந்திய படங்களில் இந்த படமும் சிறந்த படமாக விளங்கியுள்ளது. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா ராமராஜு, தொல்குடிகளின் போராளி கொமரம்பீம் போன்றோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் பல நாடுகளிலும் மொழிபெயர்த்துத் திரையிடப்பட்டது.

சுமார் 550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 1,200 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. விஜயேந்திர பிரசாத் எழுதிய இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். பல்வேறு விருதுகளை அள்ளிக்குவிக்கும் இப்படம் இந்தாண்டின் சிறந்த படங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி, இதன் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என சமீபத்தில் அறிவித்திருந்தார்.

திரையுலகின் உயரிய விருதுகளாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ மற்றும் ‘ஆஸ்கா்’ விருதுகளுக்கு பல்வேறு பிரிவுகளில் RRR திரைப்படம் போட்டியிட்டது. ஹாலிவுட் சீசனின் தொடக்க விழா எனக் கருதப்படும் அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருதுக்கு சிறந்த பிறமொழிப் படம் மற்றும் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் RRR பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் RRR படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான விருதை வென்றுள்ளது. எம். எம். கீரவாணி இசையமைத்து, சந்திரபோஸ் எழுதிய இப்பாடலை பாடகர்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிப்ளிகஞ்ச் பாடியுள்ளனர். பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 80-ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகை தற்போது wednesday என்று அழைக்கப்படும் ஜென்னா ஆா்டேகா சிறந்த பாடலுக்கான விருதை ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அறிவித்தார். இந்த பாடலில் இதில் இரண்டு கதாநாயகன்களும் ஆடிய அந்த ஸ்டேப், டிக்டாக், ரீல்ஸ் ஆகியவற்றில் பலரும் முயற்சி செய்து வீடியோவாக வெளியிட்டு வந்தனர்.

படக்குழுவினருடன் விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளா் கீரவாணி, ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்று கொண்டாா். அப்போது, அவா் பேசுகையில், இந்த விருதுக்கு முழுக் காரணமான இயக்குநா் ராஜமௌலிக்கு, அவரின் கனவுக்கு நன்றி எனக் குறிப்பிட்டார். கீரவாணி ராஜமெளயின் நெருங்கிய இரத்த சம்பந்தப்பட்ட உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Moon Walk நடனம் அஜித் ஆடியது எப்படி ? - துணிவு ஷூட்டிங் சுவாரஸ்யம் பகிர்ந்த H.வினோத் !