Cinema

“திரைப்பட விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்..?” : Movie Reviewers தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

திரைப்பட விமர்சனத்துக்கு அடிப்படை என்ன?

எல்லா கலை படைப்புகளுக்கும் அரசியல் உண்டு. எனவே எந்த அரசியலை கலை முன் வைக்கிறது என்பதிலிருந்தே நல்ல விமர்சனம் தொடங்க முடியும். பொதுவாக திரை விமர்சனம் என்கிற பெயரில் 'திரைக்கதை விறுவிறுப்பு', 'ஒளிப்பதிவு நச்', 'படத்தொகுப்பு அற்புதம்', 'கலை இயக்கம் செம்மை' என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் ஒற்றைத்தன்மை ரசனையை திணிப்பதாக மட்டுமே கருத வேண்டும்.

திரைக்கதை மெதுவாக நகரும் படங்களும் ஒரு ரசனையைக் கொண்டிருக்கும். விறுவிறுப்பான திரைக்கதை ரசனையாளனுக்கு, துருக்கிய படம் பிடிக்க வாய்ப்பு இல்லை. போலவே அழகாக மட்டுமே ஒளிப்பதிவு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது போல் வெவ்வேறு வகையான ரசனைகள் மக்களுக்கு இருக்கின்றன. அத்தகைய எல்லா வகை ரசனைகளையும் அங்கீகரித்து எழுதப்படுவதே நல்ல விமர்சனம்.

இன்றைய சூழலில் பட ஆக்கம் என்பதற்கு பெரிய சிரமங்கள் தேவையில்லை. நிறைய பணம் கொட்டுகிறார்கள். நல்ல டெக்னீஷியன்கள் கிடைத்து விடுகிறார்கள். எனவே பணம் இருக்கும் எவரும் சிறப்பான திரை ஆக்கத்தைக் கொடுத்து விட முடியும். எனவே கருத்தியலைதான் பிரதானமாக பேச வேண்டியிருக்கிறது.

படம் என்பது ஓர் ஊடகம். ஏதோவொரு கருத்தை செலுத்த பயன்படும் ஊடகம். அக்கருத்து ஏதோவொரு அரசியல் படிநிலையில் இருந்தே உருவாகும். அதை அணுகுவதில் இருந்துதான் படத்தை மதிப்பிட வேண்டும்.

உதிரிப் பூக்கள் படத்தில் ஒரு காட்சி! விஜயனும் ஆசிரியர் பாத்திரமும் சந்திக்கும். விஜயன், ஆசிரியர் பாத்திரத்தைத் திட்டி, பள்ளிக்கு வரச் சொல்வார். தலைமை ஆசிரியர் விஜயன் என்பதால், ஆசிரியர் பாத்திரம் பதறி அமைதியாகி அவருடன் நடந்து செல்ல வேண்டும். இன்றும் படம் பாருங்கள். விஜயன் அதட்டுவார். ஆசிரியர் பதறுவார். இருவரும் நடந்து செல்லும் போது சிரித்து பேசியபடி செல்வார்கள். Continuity மிஸ் ஆகியிருக்கும். திரைமொழியின்படி இது ஒரு தவறு. ஆனால் உதிரிப்பூக்களை புறக்கணித்துவிட முடியுமா?

சமூகத்துக்கு தேவையான கருத்தியல் படமாக வருகையில் திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, கலை போன்ற பல விஷயங்களில் சிக்கல்கள் இருக்கலாம். அடிப்படையான கதை சொல்லல் சுவாரஸ்யமாக நடந்திருக்கிறதா என்பது மட்டுமே நல்ல விமர்சனத்தின் பிரதான அணுகுமுறையாக இருக்க வேண்டும். மற்றபடி அது மெதுவாக இருக்கிறது, art direction not upto the mark என்பதைப் பற்றிய கவலையெல்லாம் தேவையில்லை.

எனவே அடிப்படையில் கருத்தியல்தான் முக்கியம். உங்களுக்கான கருத்தியல் என்னவென கண்டுபிடியுங்கள். அதைப் பேசுவதற்கான வெளியை எந்தப் படம் உருவாக்குகிறது எனப் பார்த்து அதைப் பேசத் தொடங்கி உங்கள் கருத்தியலை முன் வையுங்கள். அப்படம் படுமசாலாத்தனமான படங்களாகவும் இருக்கலாம். அத்தகையப் படங்களை ஏற்றுக் கொண்டாடும் வெகுஜனத்திடம் சென்று 'நீங்கள் எல்லாம் முட்டாள்கள். உங்களுக்கு ரசனையே கிடையாது' எனப் பேசத் தொடங்காதீர்கள்.

இன்னும் நீங்கள் அந்நியமாகவே செய்வீர்கள்!

Also Read: தொடர் சர்ச்சையில் சிக்கும் 'Kashmir Files' திரைப்படம் -நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரிய இயக்குநர்!