Cinema

நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்.. நைஜீரியாவை சேர்ந்தவர்களை கொக்கி போட்டு தூக்கிய போலிஸ் !

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவரிடம் கேன்சர் நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து இருப்பதாகக் கூறி ஆன்லைன் மூலம் மர்ம கும்பல் ஒன்று தொடர்பு கொண்டுள்ளது.

மேலும் அந்த மருந்துக்காக இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 80 லட்ச ரூபாய் பெற்றுள்ளனர். பின்னர் அவர்கள் இவரை தொடர்புகொள்ளவில்லை. இதையடுத்தே தான் மோசடியால் ஏமாற்றிப்பட்டிருப்பது அதிகாரிக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த சமயத்தில் சந்தேகத்திற்குரிய வங்கியில் 3 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அவர்களது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படம் மற்றும் பெயர் பதிந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவர், கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் திருமண வரன் பார்க்கும் தளங்கள், டேட்டிங் தளங்கள் போன்றவற்றில் போலி அடையாளங்களை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 6 செல்போன்கள், 11 சிம் கார்டுகள், லேப்டாப்புகள், பிரிண்டர்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். அதோடு ரூ.10.76 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் ஐஸ்வர்யா ராய் புகைப்படத்துடன் கூடிய பாஸ்போர்ட்டை வைத்து அவர்கள் என்ன செய்ய திட்டமிட்டார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: சிறுவனை உயிரோடு விழுங்கிய நீர்யானை.. துரிதமாக செயல்பட்ட நபரால் நடந்த அதிசயம் !