Cinema

திருப்பூர் சப் கலெக்டர் ஆன காமெடி நடிகரின் மகன்.. வாழ்த்து மழையில் நனைய வைக்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் தன்னிச்சையான நடிப்பில் காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சின்னி ஜெயந்த். 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கை கொடுக்கும் கை' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள இவர், சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.

இவர் நடிகராக மட்டுமில்லமல் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், மிமிக்ரி கலைஞராகவும் இருந்து வந்தார். மேலும் ஒரு சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் திரைத்துறையில் சாதிக்கும் நடிகர்களில் பலர் தங்களது பிள்ளைகளை திரைத்துறைக்கு அறுமுகப்படுத்தி வரும் சூழ்நிலையில், நடிகர் சின்னி ஜெயந்த், தனது மகனை படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த ஊக்குவித்து வந்துள்ளார்.

இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தற்போது திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிகழ்வு திரைத்துறையில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ருதன் ஜெய் நாராயணன், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் 75 ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சின்னி ஜெயந்தின் மகனான ஸ்ருதன், தற்போது திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகர் சின்ன ஜெயந்துக்கும் அவரது மகன் ஸ்ருதனுக்கும் குடும்பத்தினர், ரசிகர்கள், திரை வட்டாரங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தந்தை சின்னி ஜெயந்த் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றதோடு, தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதினை 2009 ஆம் ஆண்டு பெற்றார். தற்போது இவரது மகன் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.

Also Read: இளம்பெண் வயிற்றுக்குள் 5 வருடமாக இருந்த கத்தரிக்கோல்.. பிரசவத்தின் போது நடந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி