Cinema

“டைம் டிராவல்.. Parallel யூனிவர்ஸ் + பாகுபலி சாகசத்தைக் கலந்த Web Series” : சினிமா விமர்சனம்!

ரசிகர்கள் மத்தியில் திரைப்படங்களைப் போல வெப் தொடர்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பும், கொண்டாட்ட மனநிலையும் நிலவி வருகிறது. ரசிகர்களிடயே ஒரு திரைப்படம் ஏற்படுத்தவல்ல தாக்கத்தை வெப் தொடர்களும் ஏற்படுத்தி வருகின்றன. திரைப்படங்களை விட பல மடங்கு வரவேற்பையும் பெற்று வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பெரும்பான்மையான தமிழ் ரசிகர்கள் கண்டு கழித்த முதல் வெப் தொடராக நம் நினைவுக்கு வருவது கேம் ஆஃப் த்ரோன் என்னும் ஆங்கிலத் தொடர். அதிகளவில் வெப் தொடர்களைத் தேடிப் பிடித்து ரசித்து வருகின்றனர் தமிழ் ரசிகர்கள். அந்த வரிசையில், உலகளவில் கவனம் ஈர்த்த வெப் தொடர்களில் ஒன்று கிங் தி எடெர்னல் மொனார்க் (KING THE ETERNAL MONARCH).

அப்படி என்ன இந்தத் தொடரின் ஸ்பெஷல்?

2020-ல் வெளியான கொரியத் தொடர் இது. லீ மின்-ஹோ கதாநாயகனாகவும் கிம் கோ-யூன் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். வூ டோ-ஹ்வான்; கிம் கியுங்-நாம்; ஜங் யூன்-சே; லீ ஜங்-ஜின் போன்ற முன்னணி கொரியன் நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மன்னர் காலத்தில் துவங்கி நிகழ்காலத்தை இணைக்கும் டைம் டிராவல் தொடராக இத்தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வில்லனால் திறக்கப்பட்ட பாரலெல் யூனிவர்ஸின் கதவுகளை மூட முயற்சி செய்யும் கொரிய பேரரசர் லீ கோன் செய்யும் சாகசங்களே கதையின் களம். மொத்தம் பதினாறு எப்பிசோட். 1994ஆம் ஆண்டு காலகட்டத்தில் கதை துவங்குகிறது. மகாராஜா லீ ஹோ தன் சகோதரரால் கொலை செய்யப்படுகிறார்.

மகாராஜாவின் மகன், நாயகன் லீ கோன்மீது கொலை முயற்சி நடைபெறும் நிலையில், அவர் மர்ம நபர் ஒருவரால் காப்பாற்றப்படுகிறார். அவரைக் காப்பாற்றியவர் யார் என்பதுதான் சஸ்பென்ஸ். லீ லிம் கொல்லப்பட்டதையாடுத்து, லீ கோன் அரசாராக நியமிக்கப்படுகிறார்.

25 ஆண்டு காலம் வெகுசிறப்பாக அரசாட்சி செய்து வருகிறார் நாயகன் லீ கோன். இருப்பினும் தன்னை காப்பாற்றியவர் யார் என்ற மர்மம் மட்டும் அவரை விடாது துரத்திக்கொண்டே இருக்கிறது. ஒரு முறை தான் காப்பாற்றப்பட்டபோது பார்த்த நபரின் சாயலில் ஒருவரைக் கண்டு அவரைத் தூரத்திக்கொண்டே செல்லும்போது, வேறு ஒரு உலகத்துக்குள் சென்று விடுகிறார். எளிமையாகக் கூறவேண்டுமானால் parallel world-க்குள் சென்று விடுகிறார்.

அங்கே துப்பறியும் அதிகாரியாக இருக்கும் நாயகியை சந்திக்கிறார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய உலகத்தில் இருக்கக் கூடிய அனைவரையும் இங்கும் சந்திக்கிறார். ஆனால் ஒருவருக்கும் அவரை யாரென்று தெரியவில்லை. உலகம் 2.O-வில் மாட்டிக்கொண்ட லீ கோனுக்கு நாயகிமேல் காதல் ஒருபுறம், தன்னை காப்பாற்றியவர் யாரென்ற தேடல் மறுபுறம் இப்படியாக கதை நகர்கிறது.

எப்படி உலகம் 2.0-விற்கு வந்தோம், மீண்டும் எப்படி தன் உலகத்திற்கு செல்வது, எப்படி இந்த உலகத்திற்கான கதவு திறக்கப்பட்டது என்பதை தேடி அலையும் வேளையில் தன் சிற்றப்பா லீ லிம் இன்னும் உயிருடன் இருப்பதும் இரண்டு உலகங்களில் நடக்கும் குழப்பங்கள் அனைத்திற்கும் அவரே காரணம் என்பதையும் கண்டுபிடிக்கிறார் லீ கோன்.

அதற்குப்பிறகு வரும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறார், தன்னுடைய மக்களையும் உலகம் 2.0-வில் இருக்கக்கூடிய தன்னுடைய காதலையும் எப்படி காப்பாற்றுகிறார்? ஆரம்பத்தில் தன்னைக் காப்பாற்றியவர் யார் என்பதைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.

ஒரு பக்கம் மந்திரியின் சூழ்ச்சிகள், மறுபக்கம் அரசை கைப்பற்ற நினைக்கும் லீ லிம்மின் வில்லத்தனம், நடு நடுவே காதல் என பரபரப்பாக செல்லக்கூடிய தொடர் கிங் தி எடெர்னல் மொனார்க்.

டைம் டிராவல் என்னும் தத்துவத்திற்கு சரியான விளக்கமோ விரிவுரையோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான அறிவியல் விளக்கம் கொடுத்து அதற்குள் டைம் ட்ராவல் தத்துவத்தைப் பொருத்திப் படங்களைத் தயாரித்து வருகிறார்கள் இயக்குநர்கள்.

அப்படி, இத்தொடரிலும் டைம் ட்ராவல் குறித்து ஒரு விளக்கம் கூறப்படுகிறது. சில நேரங்களில் சிந்தனை செய்து பார்த்தால் கொடுக்கப்பட்ட விளக்கம் பல இடங்களில் எல்லை மீறலாகத் தெரிகிறது. இருப்பினும், கணிதத்தையும் அறிவியலையும் உள்ளே நுழைத்து நன்றாகவே நியாயப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

இத்தொடரில் புல்லாங்குழலும், ராஜாவுடைய குதிரையும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. parallel யூனிவர்ஸூக்கான திறவுகோளாக புல்லாங்குழல் எப்படி பயன்படுகிறது என்பதும் , டைம் டிராவல் செய்யும் பொழுது லீ கோன் தன் குதிரையுடன் செல்வதும் ரகளையான காட்சிகள். உதாரணமாக , டைம் டிராவல் செய்து 21ஆம் நூற்றாண்டுக்குள் குதிரையுடன் வந்து இறங்கும் ராஜா, டிராஃபிக்கில் குதிரையை வைத்துக்கொண்டு செய்யும் அட்டகாசாங்கள் ஜாலி ரைட்.

இத்தொடருக்கு மற்றுமொரு தனித்துவமும் இருக்கிறது. எப்படி தென்கொரியாவில் லீ மின் ஹோ ஒரு பிரபல நடிகரோ அதுபோல ராஜாவின் குதிரையாக வரக்கூடிய மேக்ஸிமஸ் தென்கொரிய சினிமாவில் பிரபலம். இந்தக் குதிரையின் பெயர் பெஞ்சமின். ஐந்துக்கும் மேற்பட்ட கொரியன் தொடர் மற்றும் பாடல்களில் இக்குதிரை நடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் , இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் நாயகன் லீ மின் ஹோ ஒரு கூடை நிறைய பழங்களையும், நாயகி கோ யூன் ஒரு வண்டி நிறைய காரட் ஜூஸையும் இக்குதிரைக்குப் பரிசாக வழங்கிய செய்தி அந்நேரத்தில் வைரலானது.

நாயகன் லீ மின் ஹோ நடிப்பில் வெளியான மற்ற திரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இத்தொடரில் அவருடைய நடிப்பு அவ்வளவு தனித்துவமானதாக இல்லை என்பதே உண்மை. ஆனால் கோ யூன் அதிரடியான நாயகியாகத் தன் கதாபாத்திரத்துக்கு ஏற்றார் போல் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். திரைக்கதையும் ஒளிப்பதிவும் இத்தொடருக்கு சிறப்பு சேர்த்துள்ளன.

கொரியன் மொழித் தொடர் என்பதால் கதாபாத்திரங்களைப் புரிந்து கொள்வதற்கு சிறிது நேரம் தேவைப்படும் . அதற்கேற்ப தொடரும் மெதுவாகவே நகர்கிறது . அத்துடன், இரண்டு வேறு வேறு உலகத்தில் இருக்கக்கூடிய நாயகனும் நாயகியும் காதலிப்பது என்பது," என்ன ரங்கா ஜோக் காட்டுறியா? ", என்பது போல இருக்கிறது.

பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என்பது போல், இத்தொடருக்கான பெரிய திருப்பம் லீ கோனை யார் வில்லனிடம் இருந்து காப்பாற்றியது என்பது தான். மிகவும் எளிமையான திருப்பத்தை வைத்துக்கொண்டு தொடர் முழுவதையும் விறுவிறுப்பான திரைக்கதையாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

டைம் ட்ராவல் தத்துவம் சரியாக பொருந்தியிருக்கிறதா என்றால் பல இடங்களில் இல்லை என்பதே பதில். இருப்பினும் கமர்ஷியலான ஒரு ஆக்‌ஷன் தொடர் பார்க்க வேண்டும். அதுவும், வேற்று மொழித் தொடர் பார்க்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இத்தொடர் சிறப்பான தேர்வு.

டைம் டிராவல், parallel யூனிவர்ஸ் என்ற அறிவியல் தத்துவத்துடன் ஜெய் மகிழ்மதி என பாகுபலி சாகசத்தைக் கலந்தால் கிங் தி எடெர்னல் மொனார்க் கொரியத் தொடர் கிடைத்துவிடும். இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்த்தில் உள்ளது பார்த்து மகிழுங்கள் .

- சண்முகப் பிரியா செல்வராஜ்

Also Read: “இறப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு தானே இரங்கற்பா எழுதிய கண்ணதாசன்”: பிறந்த தின சிறப்புப் பகிர்வு!