Cinema

நாம் பார்த்திராத கேங்ஸ்டர்... ‘கருட காமனா ரிஷப வாகனா’ கன்னட படம் சொல்லும் விஷயம் என்ன?

கன்னடத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம், கருட காமனா ரிஷப வாகனா.

மங்களதேவி என ஒரு ஊர். அங்கு சிவா, ஹரி என இரு நண்பர்கள். கேங்க்ஸ்டர்கள். Good Cop, Bad Cop போல சிவா முரட்டு கேங்க்ஸ்டர். ஹரி சாத்வீக கேங்க்ஸ்டர். சிவா ஒருவனை அடிக்க பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை. நண்பன் ஹரிக்கு எதிராக ஒருவன் சிந்தித்தால் கூட போதும். சிவா கொலை கூட செய்யத் தயங்க மாட்டான்.

இருவரின் நட்பும் பால்யகாலத்தில் தொடங்கிய நட்பு. குறிப்பாக சிவாவின் பெற்றோர் யாரெனத் தெரியாது. ஆதி என்னவெனத் தெரியாதவன் சிவா. எடுத்து வளர்த்தவர்கள் வீட்டில் இருந்தவன் ஹரி. எனவே ஹரி மீது சிவாவுக்கு நட்பு தாண்டிய அக்கறையும் உறவும் உண்டு.

சிவாவின் முரட்டு குணத்தால் அவனுடன் இருக்கும் ஹரிக்கும் மரியாதை கிட்டுகிறது. அந்த மரியாதையைக் கொண்டு அவன் கேங்க்ஸ்டர் உலகுக்குள் நுழைகிறான். இருவருக்கும் ஊருக்குள் பயமும் இருக்கிறது. மரியாதையும் இருக்கிறது.

அடுத்தடுத்த கட்டங்களில் ஹரிக்கு அரசியல் பரிச்சயம் நேர்கிறது. ஓர் அரசியல்வாதியுடன் நெருக்கமாகிறான். அரசியல்வாதிக்கு சிவா மீது அச்சம் இருக்கிறது. எனவே சிவாவிடமிருந்து ஹரியை தள்ளி இருக்கச் சொல்கிறான். சிவாவுக்கும் ஹரிக்கும் இடையில் இடைவெளி விடுகிறது. ஒரு கட்டத்தில் சிவாவுக்கு எதிராகத் திரும்புகிறான்.

ஆத்மார்த்த நட்புறவு அரசியலின் தலையீட்டில் பிரிகிறது. இறுதியாக என்ன நடக்கிறது என்பது மிச்சக்கதை.

அரசியல், நட்பு, உறவு, அகங்காரம் போன்ற பல மனித உறவு சிக்கல்களைப் படம் கையாளுகிறது. கதையின் களம் பல வகைகளில் சுவாரஸ்யப்படுத்தப் படுகிறது. அதில் பிரதான சுவாரஸ்யம் சிவன் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான். அவர்தான் பட இயக்குநர். வழுக்கைத் தலை, நோஞ்சான் உடம்பு என ஒரு கேங்கஸ்டராக நாம் அறிந்திருந்த எந்தத் தன்மையும் இல்லாதவரை கேங்க்ஸ்டரென காட்டி நம்பச் சொல்கிறார்கள். சுவாரஸ்யம் என்னவென்றால் நாமும் நம்புகிறோம்.

ஹரி, சிவன் எனப் புராண கதாபாத்திரங்களை கொண்டு களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர். இரு கதாபாத்திரங்களையும் சைவம், வைஷ்ணவம் என புரிந்து கொண்டால் கதை கொள்ளும் தளமே வேறாக இருக்கிறது.

ஆக்கமாகவும் திரைக்கதையாகவும் யதார்த்தத்துடன் அழகாக படத்தைப் படைத்திருக்கிறார் இயக்குநர். இப்படம் Zee5 ஓடிடி தளத்தில் இருக்கிறது.

Also Read: சாதி அதிகார வெறியை முற்பிறவி என்கிற புனைவைக் கொண்டு பேசியிருக்கும் ‘ஷ்யாம் சிங்கா ராய்' - படம் எப்படி?