Cinema

‘ஜல்லிக்கட்டு’ : மலையாளத்திலிருந்து ஓர் அருவெறுக்க வைக்கும் சினிமா! #JallikattuReview

முதலிலேயே ஒன்றைச்சொல்ல நினைக்கிறேன். மிக நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பின் தமிழகத்தில் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது 'ஜல்லிக்கட்டு'. சென்னையில் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல். ஆனாலும் ஏன் இங்கு ரிலீஸ் செய்வதில் இத்தனை தாமதம் என்பதை சீக்கிரம் விசாரனைக்கு உட்படுத்துங்கள்.

இனி,
மலையாளம் என்றாலே 'feel good' படங்கள்தான் வரும். எல்லா விதமான படங்களையும் மெதுவான திரைக்கதையை வைத்தே சொல்லுவார்கள். இதுபோன்ற கருத்துகளில் பெரிய உண்மையில்லை என்றாலும்கூட, அந்த விமர்சனத்தையும் தகர்க்கிறது ஜல்லிக்கட்டு. மிகவும் அருவெறுப்பான காட்சிகளை வைத்தே கதைசொல்லப்படுகிறது. ஆனால் அந்த அருவெறுப்புதான் இந்த சமூகத்தின் உண்மை மனநிலை என்ற நிலையிலிருந்துதான் இந்தப் படம் பேசுகிறது.

இயக்குனர் லிஜோ பெல்லிசேரி தன் முந்தைய படங்களின் நீட்சியாகவே இதையும் இயக்கியிருக்கிறார். ஈமாயு, அங்கமாலி டைரீஸ் என தன் படங்களில் அவர் தொடர்ந்து செய்துகொண்டிருப்பது, தான் சார்ந்திருக்கும் நிலத்தையும் அங்கிருக்கும் வாழ்வியலையும் முன்வைத்து ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கான அரசியலைப் பேசுவதுதான்.

"உங்கள் படம் எத்தனை குறுகிய அளவிலான நிலப்பரப்பை, வாழ்வியலைப் பேசுகிறதோ, அதற்கு நேர்மாறான மிகப்பெரும் உலகப்பார்வையை பெறும்", ஆஸ்கர் வரை தன் படங்களை கொண்டுசென்ற இயக்குனர் வெற்றிமாறன் இப்படிச் சொல்கிறார்.

சினிமா அனுபவம் (film experience) என ஒரு பதம் இருக்கிறது. அதன் உண்மைப்பொருளை உணர்வதற்கு ஜல்லிக்கட்டு போன்ற உதாரணங்கள் எப்போதாவது தான் கிடைக்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஒரு காட்சிக்கு மிகப்பொருத்தமான பிண்ணனி இசை என்பது அந்த இடத்தில் இருக்கும் சப்தங்கள்தான். எனில் பின்னணி இசை என்ற ஒன்றை எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம். இந்தப் படம் அதற்கொரு நியாயத்தைச் செய்கிறது. இசைக்கருவிகள் இல்லாமல் குரல்களை வைத்தே (A Cappella) பிண்ணனி இசை அமைக்கப்பட்டிருப்பது படத்தின் நகர்விற்கு பெரிதாக துணைநிற்கிறது.

படத்தின் இன்னுமொரு முக்கிய தொழில்நுட்பத்தைப் பற்றி பேசவேண்டும். ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்தின் அடையாளமாக மாறுகிறார். ஒப்பிட்டுப் பேசுவதற்குக்கூட இதைப்போன்ற வேறொன்று இல்லையெனும் அளவிற்கு வேலை செய்திருக்கிறார். படத்தின் எல்லா ஃப்ரேமும் பரபரவென பறக்கிறது என்ற உணர்வு ஏற்படும்போதுதான் படத்தின் முக்கியமான ஒரு காட்சியை ஃப்ரீஸ் செய்கிறார், மனம் உறைந்துவிடுகிறது. ஒளிப்பதிவில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவதில் க்ரீஷுக்கு இருக்கும் திறமை அளப்பறியது.

படம் பேசும் அரசியல் பெரிய எல்லைகளையும், நீண்ட விவாதங்களையும் உள்ளடக்கியது. எனில் இப்படியான ஒரு சினிமா செய்யவேண்டியது விவாதத்தைத் தொடங்குவதற்கான மையமாக இருத்தல்தான். அதில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது ஜல்லிக்கட்டு. படத்தின் மூலக்கதையான 'மாவோயிஸ்ட்' எனும் சிறுகதையிலிருக்கும் அசத்தலான நக்கல் தொனியை பரபரப்பான இந்த திரைக்கதையாக்கலிலும் பயன்படுத்தியிருப்பது படத்தின் ஜனரஞ்சக நோக்கத்தை பூர்த்திசெய்கிறது.

'உலகம் ஒரு பெரும் சமநிலையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதைக் குலைக்க சிறு பட்டாம்பூச்சியின் சிறகசைவு போதுமானது', இதைத்தான் மனித தொடக்கத்திலிருந்து பேசி நிறுவுகிறது ஜல்லிக்கட்டு. இப்படியான சினிமாக்கள் தொடர்ந்து நம் நிலத்திலிருந்து உருவாவது மிக அவசியமானது. அதுவே சினிமாவை கலை எனும் இடத்தில் ஒட்டிவைத்திருக்கும்!