Cinema

பகுத்தறிவு பேசிய திராவிட சினிமா ‘பராசக்தி’! #67YearsOfParasakthi

கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் 67 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இன்றளவும் அழியாக்காவியமாக நிலைத்து நிற்கிறது ‘பராசக்தி’.

தமிழ் சினிமா பேசத்துவங்கி நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. பேசத்துவங்கிய தமிழ் சினிமா பாடல்களின் சினிமாவாகவே இருந்தது. அதைப் பேச வைத்தவர் கலைஞர். 70 ஆண்டுகள் தமிழ் சினிமாவை தன் வசன நடைகளால் கைக்குள் வைத்திருந்தார்.

பராசக்தி படம் வெளியாகி 67 ஆண்டுகள் ஆகிவிட்டது. 67 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தை ஏன் இன்று நடைபெறும் திரைப்பட விழாக்களில் திரையிட ஆர்வம் கட்டுகிறார்கள் சினிமா ஆர்வலர்கள்?

திரைவிழாவில் பராசக்தியை திரையிடக்கூடாது என ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் சில அரசியல் தலைவர்கள். பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்பட்ட சினிமாவாகவும் சிலர் எதிர்க்கும் சினிமாவாகவும் இந்திய சினிமா வரலாற்றில் நின்று நிலைத்து நீடிக்கும் அளவுக்கு பராசக்தியை உருவாக்கியவர் கலைஞர்.

நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படம் ‘பராசக்தி’. சிவாஜி கணேசன் தன் சினிமா வாழ்வில் உலக அளவில் உச்சம் தொட்ட நடிகராக இருந்தார். அவர் நடிப்பு இன்று பால பாடமாக நடிப்புத்துறைக்கு இருந்தாலும், குணசேகரன் என்னும் ஒரு மனிதன் கலைஞர் கருணாநிதி எழுதிய வசனங்கள் மூலமே உலகமறிந்த மாபெரும் கலைஞன் ஆனார்.

சினிமாவுக்கு வந்த முப்பது வயதுக்குள் 10 படங்களுக்கு திரைவசனம் எழுதி உச்சம் தொட்டு திராவிட சினிமா பாணி என்ற தனி வகையை உருவாக்கியவர் கலைஞர்.

இந்திய சினிமா வரலாற்றில் பரசாக்தியை அழுத்தம் திருத்தமான ஒரு இடத்தில் வைத்தவர். இந்தியா சினிமா எவ்வளவோ மாற்றம் பெற்று விட்டது. அடித்தட்டு மக்களின் குரல்கள் அழுத்தமாக ஒலிக்கத் துவங்கி விட்டது. ஆனால், அது அத்தனைக்கும் முன்னோடியான முதல் சினிமா பராசக்தி.

இந்தியா சினிமா வரலாற்றைப் பேசும் எவரும் பராசக்தியை நிராகரித்து விட்டுப் பேச முடியாது என்பது கலைஞர் எழுதி வைத்த சினிமா கோட்பாடு.

பராசக்தி என்பது வெகுமக்கள் வழிபடும் கடவுளின் பெயர். ஒரு கடவுளின் பெயரை வைத்து ஆன்மீக நம்பிக்கை உள்ள மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்து கடவுளுக்கு எதிராக அல்ல கடவுளின் பெயரால் சிலர் நடத்தும் அக்கிரமங்களுக்கு எதிராக ஆன்மீகவாதிகளுக்கு கலைஞர் எடுத்த பாடம்தான் பராசக்தி. அதன் தேவை இன்றளவும் உள்ளதால்தான் அழியாக்காவியமாக பராசக்தி இன்றும் நின்று நிலைக்கிறது.