Cinema

சூர்யாவின் ‘காப்பான்’ ரிலீசுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 3வது முறையாக சூர்யா நடித்துள்ள படம் ‘காப்பான்’. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரகனி, தலைவாசல் விஜய் என பலர் நடித்துள்ளனர்.

நாளை (செப்.,20) ரிலீசாகவுள்ள இந்த படத்துக்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. “2016ம் ஆண்டு சரவெடி என்ற தலைப்பில் தான் கூறிய கதையை கே.வி. ஆனந்த் காப்பான் என்ற பெயரில் தற்போது படமாக எடுத்துள்ளார்” என சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்ற நபர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஏற்கெனவே இந்த வழக்கு தனி நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது கே.வி. ஆனந்தும், தயாரிப்பு நிறுவனமான லைகாவும் பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், ஜான் சார்லஸ் என்ற நபரை தனக்கு தெரியாது என கே.வி. ஆனந்தும், விளம்பரத்திற்காக இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளார் என லைகா நிறுவனமும் கூறியுள்ளது. இதனையடுத்து, காப்பான் படத்துக்கு எதிரான வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

நாளை படம் ரிலீசாகவுள்ள நிலையில், தன் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கை தள்ளுபடி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜான் சார்லஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று (செப்.,19) நீதிபதி மணிக்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஜான் சார்லஸின் மனுவை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் நாளை காப்பான் படம் ரிலீஸாவில் எந்த தடையுமில்லை.

முன்னணி நடிகர்களின் புதுத்திரைப்படங்கள் வெளிவரும் போது, கதை திருட்டு உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.