Cinema

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ‘மூன்றெழுத்து’ வசனம் : என்ன படம், யார் எழுதிய வசனம் அது - தெரியுமா ?

’இன்று’ (எனும் மூன்றெழுத்தில்) திடீரென ஒரு ’வீடியோ’ (எனும் மூன்றெழுத்து) ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இப்போதே பலருக்கும் விஷயம் புரிந்திருக்கும்.

ஒரு குறிப்பிட்ட வீடியோ இன்று திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்து, “வியக்க வைக்கும் வசனம்... ’யப்பா’... இதுவும் மூன்றெழுத்து... யாருப்பா அது வசனகர்த்தா ?” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து தங்கள் வியப்பை பதிவிட்டிருந்தனர். பலரும் இது என்ன படம் ? யார் எழுதிய வசனம் ? என்கிற கேள்வியை எழுப்பி இருந்தனர்.

குறிப்பிட்ட அந்தக் காட்சி ‘மூன்றெழுத்து’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்தப் படத்தின் குறிப்பிட்ட காட்சியில் பேசும் அனைவருமே மூன்றெழுத்துச் சொற்களையே குறிப்பிட்டு பேசிக் கொண்டிருப்பதுதான்.

1968ம் ஆண்டு வெளியான ‘மூன்றெழுத்து’ திரைப்படத்தை இயக்கியவர் டி.ஆர்.ராமண்ணா. ‘மூன்றெழுத்து’ திரைப்படம் 'க’, ‘மு’, ‘தி’ என்னும் மூன்றெழுத்துகளைக் ரகசியக் குறிப்பாகக் கொண்ட ஒரு க்ரைம் த்ரில்லர் படம். இப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா, நாகேஷ், ஷீலா, அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வசனம் எழுதியவர் டி.என்.பாலு.

டி.என்.பாலு

இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா எனும் தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் ராமசந்திரன் டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர். டி.ஆர்.ராமன்னா ‘நீ’, ‘நான்’, ‘மூன்றெழுத்து’, ‘நீயும் நானும்’ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘மூன்றெழுத்து’ திரைப்படத்தின் வசனகர்த்தா டி.என்.பாலு, சிவாஜி நடித்த ‘அஞ்சல் பெட்டி’, ஜெய்சங்கர் நடித்த ‘மனசாட்சி’, ‘சிந்திய ரத்தம்’, கமல்ஹாசன் நடித்த ‘உயர்ந்தவர்கள்’, ‘சட்டம் என் கையில்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

1981ல் கமல்ஹாசன் நடிப்பில் ‘சங்கர்லால்’ படத்தை தயாரித்து இயக்கிவந்த டி.என்.பாலு திடீரென உயிரிழந்துவிடவே, படத்தை முழுமையாக இயக்கி வெளியிட்டார் கமல்ஹாசன்.

சமீபத்தில், ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படத்தின் கதாபாத்திரமான நேசமணி ட்ரெண்ட் ஆகி இணைய உலகத்தை பரபரக்கச் செய்தது. அவ்வப்போது, இதுபோல பழைய திரைப்பட காட்சிகள், மீம் டெம்ப்ளேட்டாக ட்ரெண்டாவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த ‘மூன்றேழுத்து’ காட்சி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.