Cinema

‘Hobbs and Shaw’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? : ‘Fast and Furious’ விமர்சனம்!

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் படத்தின் முந்தைய பாகங்கள் கொடுத்த வெற்றியே இந்தப் படத்தின் முதலீடு. ஜேஸன் ஸ்டாத்தம், டுவைன் `தி ராக்' ஜான்சன் இருவருமே படத்தின் டிரம்ப் கார்டுகள். ‘ஹாப்ஸ் & ஷா’ என்கிற ஒற்றை டேக்லைன் தான் படத்துக்கான ஒரே எதிர்பார்ப்பு. இவற்றைப் பூர்த்தி செய்திருக்கிறதா ஹாலிவுட் திரைப்படம் ஹாப்ஸ் & ஷா ?

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால், அதன் சீக்குவல்கள் வெளியாவது ஹாலிவுட்டின் எழுதப்படாத விதி. ஒன்றல்ல, இரண்டல்ல எட்டு பாகங்களைத் தந்துவிட்ட ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் டீமிடமிருந்து வெளிவந்துள்ள, மற்றுமொரு திரைப்படம் தான் ஹாப்ஸ் & ஷா. ஃபாஸ்ட் பட வரிசையின் ஸ்டார் நட்சத்திரங்களான ஜேஸன் ஸ்டாத்தம் மற்றும் டுவைன் ஜான்சன் இருவரை மட்டும் வைத்துக்கொண்டு எழுதப்பட்டிருக்கும் ‘ஸ்பின் ஆஃப்’ தான் இந்தப் படம்.

எதிரும் புதிருமாக இருக்கும் ஜேஸன் மற்றும் டுவைன் இருவருக்கும் ஒரு அசைன்மென்ட் வருகிறது. உலகத்தையே ஆட்டம் காணவைக்கும் வைரஸ் ஒன்றை எதிரிகளின் கைகளுக்குக் கிடைக்காமல் செய்யவேண்டும். அதற்காக தனித்தனியாக கிளம்பும் இருவரும் ஒன்றிணைந்து, வில்லன்களிடமிருந்து உலகத்தைக் காப்பாற்றினார்களா இல்லையா என்பதே ஒன்லைன்.

வழக்கமான சூப்பர் ஹீரோ கதை; வழக்கமான ஹாலிவுட் பேட்டர்ன்; வழக்கமான வில்லன்கள்; ஆனாலும், ஒரு வித மேஜிக்கை செய்கிறார்கள் டுவைன் மற்றும் ஜேஸன் ஜோடி. ஆக்‌ஷன் மட்டுமே படத்தில் பிரதானம். இந்தப் படத்தில் புதிதாக கதையை எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் ஆக்‌ஷனிலும் சென்டிமென்டிலும் சிக்ஸர் விளாசுகிறது படம். எப்போதுமே எதிரும் புதிருமாக சண்டைபோட்டுக் கொள்ளும் டுவைன் மற்றும் ஜேஸன் இணையின் ஒன்லைனரும், காமெடியும் ரசிக்கவைக்கிறது. இருவரையும் அறிமுகம் செய்யும் காட்சிகளாகட்டும், பைக் ஸ்டன்ட், இருவரும் சண்டை செய்யும் ஸ்டைல் என அனைத்திலும் வெரைட்டி காட்டியிருக்கிறார்கள். தமிழ் டப்பிங்கில் காமெடி ரசிகர்களுக்கு கூடுதல் ட்ரீட்.

வைரஸை உடலில் ஏற்றிக்கொள்ளும் ஜேஸனின் தங்கையாக வெனீஸா கிர்பை நடித்திருக்கிறார். ஆபத்தான எந்த சூழலில் மாட்டிக் கொண்டாலும் எளிதில் தப்பித்துவிடுவார். நடிப்பிலும், அழகிலும், ஆக்‌ஷனிலும் அசரடிக்கிறார். க்ளைமேக்ஸில் ஜேஸனையும் டுவைனையும் தப்பிக்க வைக்கும் இடம் அசத்தல். அதுபோல, பாதி மனிதன், பாதி ரோபோவாக வரும் டெட்லி வில்லனாக எல்பாவின் பைக் ஸ்டன்ட், டுவைனையும், ஜேஸனையும் அடித்துத் துவைக்கிறார்.

இரண்டு ஹிரோக்கள், அதுவும் அசைக்க முடியாத ஹீரோக்கள் படத்தில் இருப்பதால், அதற்கு இணையாக வில்லன் ரோல் வடிவமைக்கப்பட்டிருப்பது படத்தைக் காப்பாற்றுகிறது. இயந்திரம் எப்போதும் நமக்கு கைகொடுக்காது. மனிதமும், அன்பும் தான் நிரந்தரம் என்கிற பஞ்ச் லைனை சொல்லிச்செல்கிறது திரைக்கதை.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் கதையில் கார்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அந்த அளவுக்கு சென்டிமென்ட்டும் இருக்கும். ஜேஸனுக்கும், வெனீஸாவுக்குமான பாசம், ராக் தன்னுடைய குடும்பத்தைச் சந்திக்கும் இடம், ஒட்டுமொத்தக் குடும்பமும் டுவைன் ஜான்சனுக்காக வில்லனை எதிர்க்கும் இடம் என அனைத்தையும் பக்காவாக பொருத்தியிருக்கிறார்கள்.

கதையில் புதிதாக எதுவும் இல்லை, இந்தப் படத்துக்கும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸூக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், ஆக்‌ஷனில் அதகளப்படுத்துகிறது. கார்களைக் கொண்டு ஹெலிகாப்டரை இழுப்பது, பைக் ஸ்டன்ட், ஜேஸன், டுவைன் இருவரின் சண்டைக் காட்சிகள் நிச்சயம் பார்ப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தும். ஃப்யூரியஸ் சீரிஸின் ரசிகர்கள் என்றால், ஆக்‌ஷன் படங்களின் விரும்பி என்றால் நிச்சயம் இந்தப் படம் பார்க்கலாம். யோசித்திராத பல ஆக்‌ஷன் ட்ரீட்மென்ட் படத்தில் வெயிட்டிங்!